Friday, April 10, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 7

 உறவுகள் தொடர்கதை

திரைக்கதை 

காட்சி 7


பொழுது சாய்ந்து விட்ட நேரம். 

மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம். 

முன்பு சிலர் சீட்டாடிய அதே தெருவில் ஒரு வீட்டுத் திண்ணை.

மாடசாமி, இன்னும் சில இளைஞர்கள் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். 

மாட: நேத்து மாநாட்டுக்கு நீங்க எல்லாருமே வந்திருக்கணும். ஒங்களுக்கு தைரியம் இல்லை. நம்ம ஊர்லேந்து நான் மட்டும் போய் நின்னது எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? தலைவர் எங்கிட்ட கேக்கறாரு, 'என்ன மாடசாமி, ஒங்க ஊர்ல பாட்டாளிகளே இல்லையா?'ன்னு. 

முத்து: மாநாட்டுக்கு எல்லாரும் வரணும்னு நீ சுலபமா சொல்லிட்ட. நீ வேலைக்கு வராததுக்கே பெரிய மிராசு என்ன பேச்சுப் பேசினாரு தெரியுமா? இன்னும் நாங்கள்ளாமும் வயல் வேலைக்கு வராம, மாநாட்டுக்குப் போயிருந்தா என்ன ஆகி இருக்குமோ! உனக்குக் கூட ரெண்டு மூணு நாள் வேலை கொடுக்காம, ஒன்னைப் பட்டினி போடப் போறாராம் மிராசு.

மாட: உழைக்கிற வர்க்கத்தைப் பட்டினி போட்டே கொல்லணும்னு எப்பவுமே நெனச்சுக்கிட்டிருக்கிற இவனை மாதிரி  நிலப்பிரபுக்கள் இருக்கற வரையிலும், நம்ம நாட்டில ஏழைகள் எப்படி முன்னேற முடியும்?

மருதை: விடண்ணே! ஊர்ல இவர் ஒத்தர்தான் நெலம் வச்சிருக்காரா என்ன? இவர் வேலை கொடுக்கலேன்னா, வேற யாராவது கொடுத்துட்டுப் போறாங்க.

மாட: நான் அப்படி ஒதுங்கிப் போக மாட்டேன். எனக்கு வேற யாராவது வேலை கொடுப்பாங்களாங்கறது பிரச்னை இல்லை. நான் அவனோட வயல்ல தொடர்ந்து வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். அதனால எனக்கு வேலை கொடுக்க வேண்டியது அவனோட கடமை. இத்தனை நாளா அவனோட வயல்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்கு வேலை கொடுக்க முடியாதுன்னு அவனால எப்படிச் சொல்ல முடியும்? நம்ம ஊர் பஞ்சாயத்து ஆஃபீசில வேலை செய்யறவங்க, பள்ளிக்கூட வாத்தியார்கள் இவங்கள்ளாம் லீவு எடுக்கறதைப் பாக்கறீங்க, இல்ல? அதே மாதிரி லீவு எடுக்க நமக்கும் உரிமை உண்டு. தொழிற்சாலையில வேலை செய்யற தொழிலாளிகளுக்கு லீவு, போனஸ், பிராவிடன்ட் ஃபண்ட் இன்னும் பல வசதிகள் உண்டு. நமக்கு என்ன இருக்கு? நாமளும் தொழிலாளிகள்தானே? அவங்களாவது கட்டடத்துக்குள்ள வேலை செய்யறாங்க. நாம வெய்யில கெடந்து வாடறோம். அவனுக்காச்சு, எனக்காச்சு. பாத்துடறேன்!

கண்ணன்: அவர் ஒனக்கு வேலை கொடுக்காட்டா என்ன செய்வ, மாடசாமி?

மாட: அவன் குடலை உருவிடுவேன். சும்மா ஒப்புக்குச் சொல்ற வார்த்தை இல்லை இது. நீங்கள்ளாம் நரசிம்ம அவதாரம்னு கதை சொல்றீங்களே, அந்த நரசிம்மர் மாதிரி, வரப்பில ஒக்காந்துக்கிட்டு, அவனை என் மடியில போட்டுக்கிட்டு, என் பல்லாலேயே கடிச்சுக் கொதறிப்புடுவேன், கொதறி!

முத்து: மாடசாமி! நீ ரொம்ப ஆவேசமாயிட்டப்பா!

மாட: பின்ன என்னங்கடா? ஒங்களுக்கு முதுகெலும்பு இல்லை. யாராவது ஒத்தன் துணிஞ்சு ஏதாவது செஞ்சாதான், மத்தவங்களுக்கு விடிவு பொறக்கும். 

ராமு: நாங்கதான் ஒன்னைத் தலைவரா ஏத்துக்கிட்டமே!

மாட: தலைவர்! யாருக்குடா வேணும் இந்தத் தலைவர் வேஷமெல்லாம்? நீங்கள்ளாம் நான் சொல்றபடி நடக்கறதா இருந்தா, நம்ம பிள்ளைகளுக்காவது விடிவு காலம் பொறக்கும். இல்லாட்டா, நாம பரம்பரையா அடிமையா வாழ வேண்டியதுதான்.

கண்ணன்: அதான் அரசாங்கத்தில சட்டமெல்லாம் போடறாங்களே! நாம எதுக்கு அவசரப்படணும்?

மாட: அரசாங்கத்தில ஒவ்வொண்ணுக்கா சட்டம் போட்டு, அதை அமல் படுத்தறதுங்கறது ரொம்ப கஷ்டம்.  அதுக்கு ரொம்ப காலம் ஆகும்.  ஏதாவது ஒரு சட்டம் போட்டா, யாராவது ஒத்தன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவான். அப்புறம் அந்த வழக்கு முடியறவரையிலும் காத்திருக்கணும். அதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. நம்ம உரிமைகளை நாம போராடித்தான் பெறணும்.

மருதை: இப்ப நாம என்ன செய்யணுங்கற?

மாட: மொதல்ல ஒரு சங்கம் ஆரம்பிக்கணும். இங்கே இருக்கறவங்க மொதல்ல சங்கத்தில உறுப்பினரா சேருங்க. ஒங்களைப் பாத்து மத்தவங்களும் கொஞ்சம் கொஞ்சமா சேருவாங்க. என்ன சொல்றீங்க?

(யாரும் பதில் பேசவில்லை.)

மாட: தெரியுமே எனக்கு! ஒங்களுக்கெல்லாம் முதுகெலும்பே கெடையாது. 

முத்து: நான் ரெடி, மாடசாமி!

மாட: மத்தவங்க?

மருதை: நான் யோசிச்சுச் சொல்றேன்.

ராமு: எங்கப்பாரைக் கேக்கணும். 

கண்ணன்: அதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்பபா. இப்போதைக்கு சங்கம்னு எதுவும் வேண்டாம்.

(ஒவ்வொருவராக எழுந்து செல்ல, மாடசாமியும், முத்துவும் மட்டுமே அங்கே இருக்கிறார்கள்.)


Friday, April 3, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 6

உறவுகள் தொடர்கதை
திரைக்கதை 

காட்சி 5

(வயலில் பலர் நடவு செய்து கொண்டிருக்கின்றனர். 

பொன்னம்பலம் வரப்பில் குடையுடன் நின்றபடி, ஆட்கள் நடவு செய்வதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார்.)

பொன் (ஆட்களிடம் பொதுவாக): எங்கடா மாடசாமியைக் காணும் ?

(யாரும் பதில் பேசவில்லை.)

பொன்: என்னடா, கேக்கறேன், யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க? டேய் மருதை, நீதானடா அவனோட சினேகமா இருக்கறவன்? என்னடா ஆச்சு அவனுக்கு? காலராவா, வைசூரியா?

மருதை: எனக்குத் தெரியாதுங்கையா.

பொன்: என்னடா தெரியாது? அவங்கிட்ட பயமா? சொல்லேண்டா விஷயத்தை.

இன்னொருவன்: மாடசாமி ஊர்ல இல்லீங்க.

பொன்: எங்கேடா போயிட்டான்?

முதலில் பேசியவன்: டவுன்ல ஏதோ வேலை இருக்குன்னு போயிருக்காருங்க.

பொன்: ஓகோ! டவுன்ல வேலையா? அது என்ன தலை போற வேலை? எங்கிட்ட கேட்டுட்டுப் போறதில்ல? அவன் இஷ்டத்துக்கு வந்து போறதுன்னா, நான் மட்டும் அவனுக்கு தெனமும் வேலை கொடுக்கணுமா? வரட்டும். நாலு நாளைக்கு வேலை இல்லேன்னு சொல்லி வயத்தில அடிச்சாதான் வழிக்கு வருவான்... ஆமாம், டவுனுக்கு எதுக்குப் போயிருக்கான்?

(யாரும் பதில் சொல்லவில்லை)

பொன்: டேய் முத்து! நீதானேடா சொன்ன, அவன் டவுனுக்குப் போயிருக்கான்னு? எங்க போயிருக்கான்னு தெரிஞ்சவனுக்கு, எதுக்குப் போயிருக்கான்னு தெரியாதா? சொல்றா!

முத்து: இல்லீங்க..எங்கிட்ட சொல்லலீங்க....டவுனுக்குப் போகப் போறேன்னு மட்டும்தான் சொன்னான்.

பொன்: தோலை உரிக்கணும்டா ஒன்னை!...நீ சொல்லாட்டா எனக்குத் தெரியாதா? டவுன்ல இன்னிக்குக் கட்சி மாநாடு நடக்குது. அதுக்குத்தான் போயிருக்காரு தொரை! இவர் போய்த்தானே கொடியேத்தி மாநாட்டை ஆரம்பிச்சு வக்கணும்! திங்கறது என்னோட உப்பு.  படிக்கறது கட்சியோட வாய்ப்பாடு. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லை. ஒங்களுக்கெல்லாம் பரம்பரையா வேலை கொடுத்துச் சோறு போடறோம் இல்ல? எங்க முட்டாள்தனத்தைச் சொல்லணும்.

(விதவைக் கோலம் பூண்ட ஒரு பெண் பொன்னம்பலத்தின் பின் வந்து நிற்கிறாள். அவர் அவளை கவனிக்கவில்லை.)

வயலில் வேலை செய்பவர்களில் ஒருவன் (தயக்கத்துடன்): ஐயா! ராமாயி வந்து நிக்குதுங்க.

பொன் (திரும்பி): ஓ, ராமாயியா? இப்பத்தான் மகாராணிக்குப் பொளுது விடிஞ்சுதா?

ராமாயி: இல்லீங்க. இன்னிக்கு எங்க அப்பாருக்கு தவசம்ங்க. கோவிலுக்குப் போய், ஐயரை வச்சு தவசம் கொடுக்கணும். இன்னிக்கு என்னால வேலைக்கு வர முடியாதுன்னு  சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். நேத்து நீங்க வயல்லேந்து சீக்கிரமே கெளம்பிப் போயிட்டதால, நேத்திக்கே ஒங்ககிட்ட சொல்ல முடியல.

பொன் (சற்று முகவாட்டத்துடன்): ஓ, சரிம்மா. இதை செலவுக்கு வச்சுக்க. (மடியிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் கொடுக்கிறார்.) நல்ல காரியம். போயிட்டு வா.

(ராமாயி பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவரைக் கும்பிட்டு விட்டு, அங்கிருந்து போகிறாள்.)

பொன் (எல்லோரையும் பார்த்துப் பொதுவாக): பாத்தீங்களாடா? தன்னால வேலைக்கு வர முடியாதுங்கறதை ஒரு பொம்பளை வந்து சொல்லிட்டுப் போகுது. ஒரு பொட்டசிக்குத் தெரிஞ்ச மரியாதை கூட இந்த ஊர்ல இருக்கற மீசை வச்ச ஆம்பளைகளுக்குத் தெரியல. சரி, சரி. கொஞ்சம் சுறுசுறுப்பா வேலையைப் பாருங்க. இன்னிக்கு வேலையே நடக்கல!

காட்சி 7

உறவுகள் தொடர்கதை - காட்சி 7

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 7 பொழுது சாய்ந்து விட்ட நேரம்.  மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம்.  முன்பு சிலர் சீட்டாடிய அதே...