உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 1
கிராமத்துக் கீற்றுக் கொட்டகையில் அன்னக்கிளி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. திரைப்படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் செவ்வாய், தன் தோழி ருக்குவுடன் வருகிறாள்.
ருக்கு: என்னாடி படம் இது? ஏதோ வேலை செஞ்சுட்டு ஓச்சலா வந்து உக்காந்தா, தமாசாப் பொளுது போகுமேன்னு பாத்தா, வெறும் அளுவைப் படம். இந்த அளுவதான் நமக்கு வீட்ல எப்பவுமே இருக்கே! அதைக் காசு குடுத்துக் கொட்டாயில வந்து பாக்கணுமாக்கம்! ஏதோ ஆட்டம், பாட்டம், காதல் ஜோடி, கலர் கலரா சீனு, சுருளி மனோரமா தமாசு இதெல்லாம் இருக்குமாங்காட்டியும்னு வந்தா... சே! ஒரே அளுவைப் பொணம்டி! படம் பாத்துட்டு வெளியில வரப்ப, ஒரு சந்தோசம் இருக்கா, பாரேன்.
செவ்வாய்: ஆட்டம் பாட்டம்தான் எல்லாப் படத்திலேயும் இருக்கே ஏதோ ஒண்ணு ரெண்டு படம் இப்படி சோகமா இருந்தா என்ன குறைஞ்சு போயிடும்? இந்தப் படம் பட்டணக் கரைங்கள்ள மாசக்கணக்கா ஓடிச்சுன்னு பேசிக்கறாங்களே!
ருக்கு: ஆங்! பட்டணக்காரங்க பேச்சைக் கேளு. அவங்களுக்கென்ன?எத்தையாவது சொல்லி நம்மைப் படம் பாக்க வச்சுக் காசு பண்ணிட்டா சரிதான். ஏன், பாகவதர் படம் கூடத்தான் அந்தக் காலத்தில ஒரு வருஷம் ஓடிச்சுன்னு சொல்லுவாங்க. அதுக்காக, நீயும் நான் உக்காந்து அந்தப் படங்களைப் பாக்க முடியுமாக்கும்?
செவ்: இப்ப இந்தப் படத்துக்கு என்ன குறைச்சல்ங்கற நீ?
ருக்கு: அடி போடி! எனக்கு மனசு ஒரே விரக்தியாப் போச்சு. நம்ம அளுவை போதாதுன்னு மத்தவங்க அளுவை வேற. பாவம், அந்தப் பொண்ணு. அதைப் போட்டு அப்படி மிதிச்சுட்டுப் போறாங்களே, சொரணை கெட்ட எருமை மாடுங்க...ஆமாம், உனக்கு இந்தப் படம் புடிச்சிருக்கா?
செவ்: படம் புடிச்சிருக்கோ என்னவோ, அந்த வாத்தியார் புள்ளையைப் புடிச்சிருக்கு. நம்ம ஊருக்கும்தான் பட்டணக் கரையிலேந்து எவ்வளவோ பேர் வராங்க. நம்மளை மதிச்சு மொகம் கொடுத்து யாராவது பேசறாங்களா? ஏதோ நாமெல்லாம், கீழ்ப்பட்ட சனங்க, படிக்காதவங்க, அன்னாடம் கூலி வேலை செஞ்சு பொழைச்சுக்கிட்டு, கஞ்சியைக் குடிச்சுட்டு, வேலை செஞ்ச அலுப்பிலேயே அசந்து தூங்கிட்டுக் காலத்தை ஓட்டறவங்க.. இதுக்குமேல நம்மைப் பத்தி யாராவது நெனைச்சு கவலைப்படறாங்களா? இந்தப் படத்திலயாவது அந்த வாத்தியாரு அன்னத்தை அவ்வளவு தூரம் லட்சியம் பண்ணிப் பேசிக் காதலிச்சு, அவளை உசிரா நெனைக்கறாரே, அதைச் சொல்லு. கண்ணாளம் கட்டிக்காட்டா என்ன, இவ்வளவு தூரம் அவ மேல ஆசை வெச்சதே பெரிசில்லையா?
(ருக்கு பகீரென்று பெரிதாகச் சிரிக்கிறாள். இப்படிப் பெரிதாக அடிக்கடி சிரிப்பது அவள் இயல்பாக இருக்கிறது.)
ருக்கு: அடியே, செவ்வா! சரியா ஆளுடி நீ! அந்த அன்னத்துக்கு ஒரு வாத்தி கிடைச்ச மாதிரி, ஒனக்கும் ஒரு பட்டணத்துக்காரன் கெடைப்பானான்னு ஏங்கற போலருக்கு!
செவ்: போடி. அப்படி ஒண்ணும் இல்ல. படத்தோட கதையைப் பத்திச் சொன்னேன். நமக்கு ஏண்டி இது மாதிரி ஆசையெல்லாம்? நம்ம சோலியைப் பாத்துக்கிட்டு நாம தேமேன்னு இருக்கறப்பவே, நம்ம ஊர்ல நாலு தடிப்பசங்க நம்மை சீண்டிப் பாக்கறாங்க. இந்த இருப்பில, இப்படியெல்லாம் வேற ஆசைப்படணுமா? சரி. ஒன் வீடு வந்துடுச்சு. எங்கே, என்னோட வந்துக்கிட்டே இருக்க? தூக்க மயக்கமா? இல்ல, மனசில ஏதாவது கோட்டை கட்டிக்கிட்டு வரியா? போடி வீட்டுக்கு.
(ருக்கு பிரிகிறாள். செவ்வாய் சற்று தூரம் நடந்து தன் குடிசைக்குள் நுழைகிறாள். வீட்டில் தூக்கம் கலையாமலேயே, அவள் தந்தை வீரப்பனின் குரல் கேட்கிறது. ‘என்ன புள்ள, படம் விட்டுட்டாங்களா?’
செவ்வாய் ‘ஊம்’ என்று முனகி விட்டுப் படுத்துக் கொள்கிறாள்.
தூக்கம் வராமல் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கிறாள். ‘அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரி பின்னணியில் ஒலிக்கிறது.
கனவு போல் ஒரு தோற்றம். அவள் மணமகளாக அலங்கரிக்கப்பட்டு நின்று, சுற்றுமுற்றும் பார்க்கிறாள். உருவம் இல்லாமல், பேண்ட், சட்டை, ஷூ, சிகரெட், தோளில் ஒரு பை இவை மட்டும் தெரிய, சட்டைக் கைகள் நீண்டு இவள் கழுத்தில் மாலையிட்டு இவளை அணைத்துக் கொள்கின்றன.
காட்சி 2
மிராசுதார் பொன்னம்பலம் வீடு.
செவ்வாய், ஒரு வயதான பெண்மணியுடன் முற்றதில் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருக்கிறாள்.
வாசலிலிருந்து பொன்னம்பலம் வீட்டுக்குள் வருகிறார்.
செவ்வாய் எழுந்து நிற்க, ‘நீ உக்காரு புள்ள’ என்று சொல்லி விட்டு அவர் உள்ளே போகிறார்.
உள்ளிருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் செவ்வாய் எழுந்து நிற்க முயல, அவர் அவளைக் கையமர்த்துகிறார்.
பொன்: வூட்டுக்குப் போனதும், ஒங்கப்பனை இங்கே வந்துட்டுப் போகச் சொல்லு.
செவ்: சரிங்கையா!
பொன்: நாளைக்குக் காலையில தம்பி மதுரையிலேந்து வருது. டேசனுக்குப் போய் அவனை அழைச்சுக்கிட்டு வரணும். அதனால, வண்டி மாடுகளை ரெடி பண்ணி வைக்கச் சொல்லு. காலையில மூணு மணிக்கே கெளம்பினாத்தான் ரயில் வரதுக்கு முன்ன டேசனுக்குப் போய்ச் சேர முடியும். சாயந்திரமா என்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு. சில விஷயங்கள் சொல்லணும்.
செவ்: சின்னையாவுக்குப் படிப்பு முடிஞ்சு போச்சுங்களா?
பொன்: இல்ல. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இப்ப லீவுக்கு வரான்.
(மறுபடி உள்ளே போகிறார்.
போகும்போது கூடத்தில் மாட்டியிருக்கும் தம்பியின் புகைப்படத்தைப் பார்க்க, செவ்வாயும் அந்தப் பக்கம் ஒரு கணம் பார்த்து விட்டுத் தன் வேலையைத் தொடர்கிறாள்.)
காட்சி 3
அதிகாலை நேரம். எங்கோ தூரத்தில் கோழி கூவுகிறது.
செவ்வாயின் உறக்கத்தில் அதே கனவு.
உருவம் புலப்படாத, நாகரீகமான பட்டணத்து இளைஞன் அவளுக்கு மாலையிட்டு அணைத்துக் கொள்ளும் காட்சி.
அவள் கண் விழிக்கிறாள்.
ஒரு நிமிடம் கண்கள் செருகி, கண்ட கனவில் லயிக்கிறாள்.
மறைந்த கனவை மனதுக்குள் நினைவு கூர முயன்று தோற்கிறாள்.
சட்டென்று விழிப்பு வரக் கண்களைக் கசக்கிக் கொண்டு, பக்கத்தில் பார்க்கிறாள்.
அவள் அப்பா இல்லை.
தூரத்தில் எங்கோ ‘தே’ என்று மாட்டை விரட்டும் ஒலி கேட்கிறது.
அவள் கொட்டாவி விட்டு விட்டு, மீண்டும் படுத்துக் கொள்கிறாள்.
நிலை கொள்ளாமல் இப்படியும், அப்படியும் பரண்டு படுத்து விட்டுப் பிறகு எழுந்து நின்று, சோம்பலுடன் கைகளை முரிக்கிறாள்.
அப்படியே சுவரில் சாய்ந்து உட்காருகிறாள்.
கண்கள் சுழலத் தூக்கம் வந்து, தலை ஆடுகிறது.
காட்சியின் தொடர்ச்சியில் அவளை யாரோ எழுப்புகிறார்கள்.)
எழுப்பியவள்: அடியே செவ்வா! என்னாடி, இப்படி ஒக்காந்துக்கிட்டே தூங்கற? பொளுது விடிஞ்சு எம்மாம் நேரம் ஆச்சு தெரியுமா? வாசத் தெளிச்சுக் கோலம் போட வேண்டாமாடி? எளுந்திருடி
(செவ்வாய் கண் விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.)
செவ்: என்ன செல்லக்கா? அதுக்குள்ளாற எளுப்பி விட்டுட்டியே! ஓ...பொளுது விடிஞ்சிடுச்சு போலருக்கே!
(செல்லக்கா என்று அழைக்கப்பட்ட) செல்லி: அது சரி. இப்பதான் புரிஞ்சுதாக்கும்!
செவ்: இப்பதான் எங்கப்பாரு வண்டி ஓட்டிக்கிட்டுப் போன மாதிரி இருக்கு. அதுக்குள்ள இம்மா நேரம் ஆயிடுச்சே!
(கைகளை உதறிக் கொண்டு, புடவையைச் சரி செய்து கொள்கிறாள்.)
செவ்: ஆமாம், மதுரை ரயில்ல வந்து இறங்கி, டேசன்லேந்து நம்ம ஊருக்கு வண்டியில வந்தா, இங்க எப்ப வந்து சேர முடியும்?
செல்லி: எனக்கு என்னாடி தெரியும்? எனக்கென்ன மதுரையில மளிகை மண்டி இருக்கா என்ன, இல்லை நான் அடிக்கடி மதுரைக்குப் போய் வந்துக்கிட்டிருக்கேனா? நீ எதுக்கு இதைக் கேக்கற? ஓ, நம்ம தொரைத்தம்பி வருதே, அதுக்காகக் கேக்கறியா?
செவ்: ஆங்... அவங்க எப்ப வந்தா எனக்கென்னக்கா? எங்க அப்பாரு பாவம், காலையிலேயை குளூர்ல எந்திரிச்சு, டேசனுக்கு வண்டியை ஓட்டிக்கிட்டுப் போயிருக்காரே, எப்ப திரும்பி வருவாரோன்னு நெனைச்சுத்தான் கேக்கறேன்.
செல்லி: எல்லாம் நேரமானா வராங்க. ரயிலு வந்ததுமே, தம்பியை வண்டியில போட்டுக்கிட்டு வர வேண்டியதுதானே?...அடேடே, வண்டிச் சத்தம் கேக்குதே. ஒங்கப்பாவுக்கு நூறு வயசுதான் போ! நீ அவரைப் பத்திக் கேக்க ஆரம்பிச்ச உடனேயே, டக்குனு வந்து குதிச்சுட்டாரே!
(செவ்வாய் அவசரமாக வாசலில் ஓடிப் போய்ப் பார்க்க, தெருக்கோடியில் வீரய்யன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவது தெரிகிறது.
வண்டி அவள் வீட்டு வாசலில் வந்து நிற்க, வீரய்யன் வண்டியை விட்டு இறங்குகிறான். வீரய்யனின் முகம் சோர்வுடன் இருப்பதை செவ்வாய் கவனிக்கிறாள்.)
செவ்: என்னப்பா ஆச்சு? அதுக்குள்ளாற போயிட்டு வந்துட்டீங்களா? சின்னவரு வந்துட்டாரா?
வீர: இல்லம்மா. வண்டி வந்துது. ஆனா, சின்னவரு அதில வல்ல. நம்ம ஐயா கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னேன். அவரு அப்படியே மூஞ்சி சப்பிப் போய் உக்காந்துட்டாரு. தம்பி வல்லேன்னதும், என்ன ஆயிடுச்சோ என்னவோன்னு ஐயாவுக்கு ஒரே கவலை.
செல்லி: அதுக்கு நீ ஏன் அண்ணே மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு வர? இன்னிக்கு வல்லேன்னா, நாளைக்கு வந்துட்டுப் போகப் போறாரு. அவரு என்ன சின்னப் பிள்ளையா என்ன, காணாமப் போயிடறதுக்கு?
வீர: அதில்ல, செல்லி. தம்பி வல்லைன்னதும் நம்ம ஐயா தவிச்ச தவிப்பு இருக்கு பாரு, அதைப் பாத்ததும்தான் எனக்கு மனசு ஆறல.
செவ்: அவரு வந்துடுவாருப்பா! கெளம்பறதில ஏதாவது தாமதம் ஆயிருக்கும். அதுக்கு நீ ஏன் இப்படி இருக்க? சரி, சரி. உள்ள வா. கொஞ்சம் பளைய சோறு இருக்கு. அதைத் தின்னுட்டு வேலைக்குக் கெளம்பு. எனக்கும் ஐயா விட்டில அரிசி பொடைக்கற வேலை பாக்கி இருக்கு. நானும் கெளம்பணும்.
(வீரய்யன் துண்டை உதறிக் கொண்டு உள்ளே வருகிறான்.)
காட்சி 4
(பொன்னம்பலத்தின் வீட்டு முற்றத்தில் அமர்ந்து செவ்வாய் தேங்காய் காய வைத்துக் கொண்டிருக்கிறாள். நிழலாடியதும், வழி விட்டுச் சற்றுத் தள்ளி அமர்கிறாள். நிழல் அவளை நெருங்கி வந்து, அவள் மேல் விழுகிறது. செவ்வாய் தலை நிமிர்ந்து பார்க்கிறாள். வேட்டியும், சட்டையும் அணிந்து நிற்கும் இளைஞனைப் பார்த்துத் திகைக்கிறாள்.)
செவ் (உள்ளே திரும்பி): ஐயா! யாரோ வந்திருக்காங்க!
(ஏதோ ஒரு உள்ளுணர்வில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரிந்தவளாக, விழிகளை விரித்துப் பார்க்கிறாள்.)
செவ்: சின்னையா! நீங்களா? அடேங்கப்பா! எம்புட்டு தூரம் மாறிப் போயிட்டீங்க! அடையாளமே தெரியலையே!... ஆமாம், நீங்க ரயில்ல வல்லேன்னு அப்பா போய்ப் பாத்துட்டு வந்து சொன்னாங்களே!
துரை: உன் அப்பா சொன்னது சரிதான், செவ்வா! நான் ரயில்ல வல்ல.
செவ்: பின்ன?
துரை: பிளேன்ல வந்தேன்.
செவ்: ஏரோப்ளேன்லயா? நம்ம ஊர்ல ஏதுங்க... ஆமாம், எங்க எறக்கினாங்க?
துரை: நம்ம அரச வாய்க்கா மதகு இல்ல, அது மேலதான் எறக்கினாங்க.
செவ்: போங்கையா! நான் அறியாத பொண்ணு, படிக்காதவ, பட்டிக்காடுங்கறதால, நீங்க என்னைக் கேலி பண்றீங்க.
துரை: சேச்சே!
செவ்: பின்ன? பிளேன்ல வந்தேன்னு சொன்னது பொய்தானே?
துரை: ஆமாம்.
செவ்: பின்னே எப்படி வந்தீங்களாம்?
துரை: மயில்ல வந்தேன்.
செவ்: ஐய்யய்ய! நீங்க என்ன முருக சாமியா? எங்கே, இப்படித் திரும்புங்க. ஆறு தலை இருக்கான்னு பாக்கலாம்!
துரை: இருந்தது. ஆனா, ஆறு முகத்திலேயும் சளி புடிச்சதால, தொல்லை பொறுக்க முடியாம, அஞ்சு தலையை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டேன்.
செவ்: பட்டணத்துக்குப் போயி, நல்லாப் பேசக் கத்துக்கிட்டு வந்திருக்கீங்க. அது சரி. எப்படி வந்தீங்கன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே!
துரை: அதான் சொன்னேனே, மயில்லன்னு!
செவ்: போங்க, சின்னையா! இனிமே உங்களோட நான் பேசப் போறதில்ல. என்னை ஒரு படிக்காத பட்டிக்காடுன்னு நெனச்சுத்தானே, நீங்க இப்படி ஏமாத்தறீங்க?
துரை: இல்ல, செவ்வா! நெசமாவே நான் மயில்லதான் வந்தேன், அதாவது மெயில்ல. விடிகாலையில ரெண்டு மணிக்கு நம்ம ஸ்டேஷன்ல நிக்காமப் போகுமே, அந்த மெயில்ல! பக்கத்து ஜங்ஷன்ல எறங்கி, அங்கேந்து பஸ்ஸைப் புடிச்சு வந்தேன். நான் வழக்கமா வர பாசஞ்சர் வண்டியிலதான் வருவேன்னு நெனச்சு, அண்ணன் உங்கப்பாவை வண்டியோட ஸ்டேஷனுக்கு அனுப்பி, அவரும் பாவம், போய்ப் பாத்துட்டு வந்து, நான் வல்லேன்னு சொல்லிட்டாரு.
செவ்: எப்படியோ நல்லபடியா வந்தூ சேந்தீங்களே! நீங்க வல்லேன்னதும், பெரிய ஐயா ரொம்பப் பதறிப் போயிட்டாங்களாம். அப்பாதான் சொன்னாரு.
(பொன்னம்பலம் உள்ளிருந்து வருகிறார்.)
பொன்: செவ்வா! மொதல்ல, வூட்டுக்குப் போய், தம்பி வந்துட்டாருங்கறதை ஒங்கப்பன்கிட்ட சொல்லு. பாவம், ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருப்பான்.
செவ்: ஆமாங்கையா! சோறு கூடத் திங்க மாட்டேன்னுட்டாரு. நான்தான் சொல்லித் திங்க வச்சேன். இப்ப வேலைக்குக் கிளம்பிப் போயிருப்பாரு.
பொன்: சரி. நானும் வயலுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன். நானே அவன்கிட்ட சொல்லிடறேன். (துரையிடம் திரும்பி) டேய், துரை! ராத்திரி பூரா கண் முளிச்சு, ரயில்லேயும், பஸ்லேயும் வந்திருக்க. உள்ள போய், நல்லாத் தூங்கு. மத்ததெல்லாம் சாயந்திரத்துக்கு மேல பேசிக்கலாம்.
(போகிறார்.
பொன்னம்பலம் சென்றதும், துரை ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறான். செவ்வாய் சற்று அதிர்ச்சியுடனும், சற்று ஆர்வத்துடனும் துரை சிகரெட்டை எடுத்துப் பற்ற வைப்பதையும், புகை விடுவதையும் பார்க்கிறாள்.)
செவ்: என்னங்க சின்னையா இது? பொகையெல்லாம் விடறீங்க! புதுசா இருக்கே!
துரை: ஏன், புடிச்சா என்ன? ஒனக்குப் பிடிக்காதா?
செவ்: ஆங், எனக்கென்ன? எங்கப்பா தினமும் பீடியைப் பத்த வச்சு, ஊதி ஊதி, இருமிக்கிட்டு இருக்கறதைப் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்?
துரை: இது பீடி இல்லை, சிகரெட். ரொம்ப ஒசந்த ஜாதி!
(செவ்வாய் பெரிதாகச் சிரிக்கிறாள்.)
துரை: என்ன செவ்வா, ஏன் இப்படிச் சிரிக்கற?
செவ்: இல்லீங்க. பீடி சிகரெட்ல கூட ஜாதி இருக்கான்னு நெனச்சு சிரிச்சேன்.
துரை: ஆமாம், இருக்கு. ஜாதி இருக்கணும், செவ்வா. அதுல என்ன தப்பு? ஆனா, பொறப்பை வச்சு ஜாதியைச் சொல்லக் கூடாது. மனுஷனோட குணத்தை, அறிவை, நடத்தையை வச்சு, நல்ல மனுஷன், புத்திசாலி, முட்டாள், அயோக்கியன்னெல்லாம் ஜாதி பிரிக்கறதில என்ன தப்பு? இதோ இந்த சிகரெட், பீடி, சுருட்டு எல்லாமே பொறப்பில புகையிலை ஜாதிதான். ஆனா, அந்தஸ்தில வெவ்வேறு ஜாதியா இருக்கு!
செவ்: ஆமாங்கையா! நீங்க சொன்ன மாதிரி, இப்பல்லாம் ஜனங்க ஒத்தர் பொறந்த குலத்தை வச்சு ஜாதி பாக்கறதில்ல. அந்தஸ்தை வச்சுத்தான் பாக்கறாங்க. நீங்களும், நாங்களும் ஒரே ஜாதிதான். ஆனா, நீங்க மிராசுங்க, நாங்க கூலிக்காரங்க. அதனால, வேற ஜாதிக்காரங்க மாதிரிதானே இருக்கோம்!
துரை: ஒண்டர்ஃபுல், செவ்வா! நீ கூட இவ்வளவு அற்புதமாப் பேசறியே! இதில, படிக்காதவன்னு வேற அடிக்கொரு தடவை சொல்லிக்கற!
செவ்: நான் என்னத்தைக் கண்டேன், சின்னையா? எங்க தெருவில மாடசாமின்னு ஒத்தர் இருக்காரு. ஒங்களை மாதிரி பெரிய படிப்பு படிக்காட்டாலும், நாலு எழுத்து படிச்சவரு. அவருதான் அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது சொல்லுவாரு.
துரை: ஓ! அவரும் உங்க ஜாதிக்காரரா?
செவ்: பாத்தீங்களா? நீங்களும், நாங்களும் ஒரே ஜாதின்னாலும், நான் வேற ஜாதிங்கற மாதிரி நெனச்சுதானே, 'உங்க ஜாதிக்காரரா?'ன்னு கேக்கறீங்க! அவரு நம்ம ஜாதி இல்ல, வேற ஜாதிக்காரர்தான். ஆனா, எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவாரு. அதை விடுங்க. நீங்க ஊர்லேந்து வந்திருப்பீங்க. ரொம்பக் களைப்பா இருப்பீங்க. பெரிய ஐயா கூட ஒங்களைப் படுத்துத் தூங்கச் சொல்லிட்டுத்தானே போனாரு? நான் ஒரு அறிவு கெட்டவ. சம்பந்தமில்லாம ஏதோ பேசிக்கிட்டு நிக்கறேன். நீங்க போய்த் தூங்குங்க.
துரை: இல்லை, செவ்வா! எனக்குத் தூக்கம் வல்ல. நீ ஒன் வேலையைப் பாரு. நான் தூக்கம் வரப்ப தூங்கிக்கறேன்.
செவ்: சரிங்க. நான் என் வீட்டுக்குப் போயிட்டு, அப்புறம் வரேன். நீங்க களைப்புத் தீர நல்லாத் தூங்குங்க.
(செவ்வாய் போகிறாள். அவள் மறையும் வரை, துரை அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.)
காட்சி 5
(வயலில் பலர் நடவு செய்து கொண்டிருக்கின்றனர்.
பொன்னம்பலம் வரப்பில் குடையுடன் நின்றபடி, ஆட்கள் நடவு செய்வதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார்.)
பொன் (ஆட்களிடம் பொதுவாக): எங்கடா மாடசாமியைக் காணும் ?
(யாரும் பதில் பேசவில்லை.)
பொன்: என்னடா, கேக்கறேன், யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க? டேய் மருதை, நீதானடா அவனோட சினேகமா இருக்கறவன்? என்னடா ஆச்சு அவனுக்கு? காலராவா, வைசூரியா?
மருதை: எனக்குத் தெரியாதுங்கையா.
பொன்: என்னடா தெரியாது? அவங்கிட்ட பயமா? சொல்லேண்டா விஷயத்தை.
இன்னொருவன்: மாடசாமி ஊர்ல இல்லீங்க.
பொன்: எங்கேடா போயிட்டான்?
முதலில் பேசியவன்: டவுன்ல ஏதோ வேலை இருக்குன்னு போயிருக்காருங்க.
பொன்: ஓகோ! டவுன்ல வேலையா? அது என்ன தலை போற வேலை? எங்கிட்ட கேட்டுட்டுப் போறதில்ல? அவன் இஷ்டத்துக்கு வந்து போறதுன்னா, நான் மட்டும் அவனுக்கு தெனமும் வேலை கொடுக்கணுமா? வரட்டும். நாலு நாளைக்கு வேலை இல்லேன்னு சொல்லி வயத்தில அடிச்சாதான் வழிக்கு வருவான்... ஆமாம், டவுனுக்கு எதுக்குப் போயிருக்கான்?
(யாரும் பதில் சொல்லவில்லை)
பொன்: டேய் முத்து! நீதானேடா சொன்ன, அவன் டவுனுக்குப் போயிருக்கான்னு? எங்க போயிருக்கான்னு தெரிஞ்சவனுக்கு, எதுக்குப் போயிருக்கான்னு தெரியாதா? சொல்றா!
முத்து: இல்லீங்க..எங்கிட்ட சொல்லலீங்க....டவுனுக்குப் போகப் போறேன்னு மட்டும்தான் சொன்னான்.
பொன்: தோலை உரிக்கணும்டா ஒன்னை!...நீ சொல்லாட்டா எனக்குத் தெரியாதா? டவுன்ல இன்னிக்குக் கட்சி மாநாடு நடக்குது. அதுக்குத்தான் போயிருக்காரு தொரை! இவர் போய்த்தானே கொடியேத்தி மாநாட்டை ஆரம்பிச்சு வக்கணும்! திங்கறது என்னோட உப்பு. படிக்கறது கட்சியோட வாய்ப்பாடு. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லை. ஒங்களுக்கெல்லாம் பரம்பரையா வேலை கொடுத்துச் சோறு போடறோம் இல்ல? எங்க முட்டாள்தனத்தைச் சொல்லணும்.
(விதவைக் கோலம் பூண்ட ஒரு பெண் பொன்னம்பலத்தின் பின் வந்து நிற்கிறாள். அவர் அவளை கவனிக்கவில்லை.)
வயலில் வேலை செய்பவர்களில் ஒருவன் (தயக்கத்துடன்): ஐயா! ராமாயி வந்து நிக்குதுங்க.
பொன் (திரும்பி): ஓ, ராமாயியா? இப்பத்தான் மகாராணிக்குப் பொளுது விடிஞ்சுதா?
ராமாயி: இல்லீங்க. இன்னிக்கு எங்க அப்பாருக்கு தவசம்ங்க. கோவிலுக்குப் போய், ஐயரை வச்சு தவசம் கொடுக்கணும். இன்னிக்கு என்னால வேலைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். நேத்து நீங்க வயல்லேந்து சீக்கிரமே கெளம்பிப் போயிட்டதால, நேத்திக்கே ஒங்ககிட்ட சொல்ல முடியல.
பொன் (சற்று முகவாட்டத்துடன்): ஓ, சரிம்மா. இதை செலவுக்கு வச்சுக்க. (மடியிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் கொடுக்கிறார்.) நல்ல காரியம். போயிட்டு வா.
(ராமாயி பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவரைக் கும்பிட்டு விட்டு, அங்கிருந்து போகிறாள்.)
பொன் (எல்லோரையும் பார்த்துப் பொதுவாக): பாத்தீங்களாடா? தன்னால வேலைக்கு வர முடியாதுங்கறதை ஒரு பொம்பளை வந்து சொல்லிட்டுப் போகுது. ஒரு பொட்டசிக்குத் தெரிஞ்ச மரியாதை கூட இந்த ஊர்ல இருக்கற மீசை வச்ச ஆம்பளைகளுக்குத் தெரியல. சரி, சரி. கொஞ்சம் சுறுசுறுப்பா வேலையைப் பாருங்க. இன்னிக்கு வேலையே நடக்கல!
காட்சி 7
மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம்.
முன்பு சிலர் சீட்டாடிய அதே தெருவில், ஒரு வீட்டுத் திண்ணை.
மாடசாமி, இன்னும் சில இளைஞர்கள் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள்.
மாட: நேத்து மாநாட்டுக்கு நீங்க எல்லாருமே வந்திருக்கணும். ஒங்களுக்கு தைரியம் இல்லை. நம்ம ஊர்லேந்து நான் மட்டும் போய் நின்னது எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? தலைவர் எங்கிட்ட கேக்கறாரு, 'என்ன மாடசாமி, ஒங்க ஊர்ல பாட்டாளிகளே இல்லையா?'ன்னு.
முத்து: மாநாட்டுக்கு எல்லாரும் வரணும்னு நீ சுலபமா சொல்லிட்ட. நீ வேலைக்கு வராததுக்கே பெரிய மிராசு என்ன பேச்சுப் பேசினாரு தெரியுமா? இன்னும் நாங்கள்ளாமும் வயல் வேலைக்கு வராம, மாநாட்டுக்குப் போயிருந்தா, என்ன ஆகி இருக்குமோ! உனக்குக் கூட ரெண்டு மூணு நாள் வேலை கொடுக்காம, ஒன்னைப் பட்டினி போடப் போறாராம் மிராசு!
மாட: உழைக்கிற வர்க்கத்தைப் பட்டினி போட்டே கொல்லணும்னு எப்பவுமே நெனச்சுக்கிட்டிருக்கிற இவனை மாதிரி நிலப்பிரபுக்கள் இருக்கற வரையிலும், நம்ம நாட்டில ஏழைகள் எப்படி முன்னேற முடியும்?
மருதை: விடண்ணே! ஊர்ல இவர் ஒத்தர்தான் நெலம் வச்சிருக்காரா என்ன? இவர் வேலை கொடுக்கலேன்னா, வேற யாராவது கொடுத்துட்டுப் போறாங்க.
மாட: நான் அப்படி ஒதுங்கிப் போக மாட்டேன். எனக்கு வேற யாராவது வேலை கொடுப்பாங்களாங்கறது பிரச்னை இல்லை. நான் அவனோட வயல்ல தொடர்ந்து வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். அதனால எனக்கு வேலை கொடுக்க வேண்டியது அவனோட கடமை. இத்தனை நாளா அவனோட வயல்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்கு வேலை கொடுக்க முடியாதுன்னு அவனால எப்படிச் சொல்ல முடியும்? நம்ம ஊர் பஞ்சாயத்து ஆஃபீசில வேலை செய்யறவங்க, பள்ளிக்கூட வாத்தியார்கள் இவங்கள்ளாம் லீவு எடுக்கறதைப் பாக்கறீங்க, இல்ல? அதே மாதிரி லீவு எடுக்க நமக்கும் உரிமை உண்டு. தொழிற்சாலையில வேலை செய்யற தொழிலாளிகளுக்கு லீவு, போனஸ், பிராவிடன்ட் ஃபண்ட் இன்னும் பல வசதிகள் உண்டு. நமக்கு என்ன இருக்கு? நாமளும் தொழிலாளிகள்தானே? அவங்களாவது கட்டடத்துக்குள்ள வேலை செய்யறாங்க. நாம வெய்யில கெடந்து வாடறோம். அவனுக்காச்சு, எனக்காச்சு. பாத்துடறேன்!
கண்ணன்: அவர் ஒனக்கு வேலை கொடுக்காட்டா என்ன செய்வ, மாடசாமி?
மாட: அவன் குடலை உருவிடுவேன். சும்மா ஒப்புக்குச் சொல்ற வார்த்தை இல்லை இது. நீங்கள்ளாம் நரசிம்ம அவதாரம்னு கதை சொல்றீங்களே, அந்த நரசிம்மர் மாதிரி, வரப்பில ஒக்காந்துக்கிட்டு, அவனை என் மடியில போட்டுக்கிட்டு, என் பல்லாலேயே கடிச்சுக் கொதறிப்புடுவேன், கொதறி!
முத்து: மாடசாமி! நீ ரொம்ப ஆவேசமாயிட்டப்பா!
மாட: பின்ன என்னங்கடா? ஒங்களுக்கு முதுகெலும்பு இல்லை. யாராவது ஒத்தன் துணிஞ்சு ஏதாவது செஞ்சாதான், மத்தவங்களுக்கு விடிவு பொறக்கும்.
ராமு: நாங்கதான் ஒன்னைத் தலைவரா ஏத்துக்கிட்டமே!
மாட: தலைவர்! யாருக்குடா வேணும் இந்தத் தலைவர் வேஷமெல்லாம்? நீங்கள்ளாம் நான் சொல்றபடி நடக்கறதா இருந்தா, நம்ம பிள்ளைகளுக்காவது விடிவு காலம் பொறக்கும். இல்லாட்டா, நாம பரம்பரையா அடிமையா வாழ வேண்டியதுதான்.
கண்ணன்: அதான் அரசாங்கத்தில சட்டமெல்லாம் போடறாங்களே! நாம எதுக்கு அவசரப்படணும்?
மாட: அரசாங்கத்தில ஒவ்வொண்ணுக்கா சட்டம் போட்டு, அதை அமல் படுத்தறதுங்கறது ரொம்ப கஷ்டம். அதுக்கு ரொம்ப காலம் ஆகும். ஏதாவது ஒரு சட்டம் போட்டா, யாராவது ஒத்தன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவான். அப்புறம் அந்த வழக்கு முடியறவரையிலும் காத்திருக்கணும். அதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. நம்ம உரிமைகளை நாம போராடித்தான் பெறணும்.
மருதை: இப்ப நாம என்ன செய்யணுங்கற?
மாட: மொதல்ல ஒரு சங்கம் ஆரம்பிக்கணும். இங்கே இருக்கறவங்க மொதல்ல சங்கத்தில உறுப்பினரா சேருங்க. ஒங்களைப் பாத்து மத்தவங்களும் கொஞ்சம் கொஞ்சமா சேருவாங்க. என்ன சொல்றீங்க?
(யாரும் பதில் பேசவில்லை.)
மாட: தெரியுமே எனக்கு! ஒங்களுக்கெல்லாம் முதுகெலும்பே கெடையாது.
முத்து: நான் ரெடி, மாடசாமி!
மாட: மத்தவங்க?
மருதை: நான் யோசிச்சுச் சொல்றேன்.
ராமு: எங்கப்பாரைக் கேக்கணும்.
கண்ணன்: அதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்ப்பா. இப்போதைக்கு சங்கம்னு எதுவும் வேண்டாம்.
(ஒவ்வொருவராக எழுந்து செல்ல, மாடசாமியும், முத்துவும் மட்டுமே அங்கே இருக்கிறார்கள்.)
காட்சி 8
காட்சி 9
(செவ்வாயும், ருக்குவும் அம்மன் கோவிலுக்குப் போகிறார்கள். பூசாரி தீபாராதனை காட்டி விட்டு, அவர்களுக்குக் குங்குமம் கொடுக்கிறார்.
பூசாரி: என்ன ருக்கு, இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கே, என்ன விஷயம்?
ருக்கு: இல்லியே! எப்பவும் போலத்தான் இருக்கேன்.
பூசாரி: நீ இல்லேனு சொன்னாலும், சிரிப்பை அடக்க முடியாம நீ தவிக்கறதை, உன் முகம் காட்டுதே!
ருக்கு: போங்க பூசாரி ஐயா, எதையானும் சொல்லிக்கிட்டு!
பூசாரி: என்ன செவ்வா, நீயே சொல்லு, நான் சொல்றது சரியா இல்லையான்னு! (செவ்வாய் அவர் சொன்னதை கவனிக்காமல் வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து) என்ன செவ்வா? நீ ஏதோ குழப்பமா இருக்க போல இருக்கே!
செவ்: ஆங்... என்ன சொன்னீங்க?
பூசாரி: என்னம்மா ஒடம்புக்கு?
செவ்: ஒண்ணும் இல்லீங்களே!
பூசாரி: சரியான ஜோடிதான் நீங்க ரெண்டு பேரும்! ஒருத்தி என்னடான்னா, எதையோ நெனச்சு நெனச்சு சிரிச்சுக்கிட்டிருக்கா. இன்னொருத்தி எதையோ நெனச்சுக் குழம்பிக்கிட்டிருக்கா. கேட்டா, ரெண்டு பேருமே ஒண்ணும் இல்லேங்கறீங்க. வரப்ப, ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா, இல்லியா?
ருக்கு: ஓ, நிறையப் பேசிக்கிட்டோமே!
பூசாரி: பொய்யைப் பாரு. ரெண்டு பேருக்குமே வெவ்வேற நினைவு. அதனால, ரெண்டு பேரும் எதுவும் பேசிக்கல. ஒருத்தி எதுவும் பேசாதது இன்னொருத்திக்கு வித்தியாசமாத் தெரியவும் இல்ல. சரி, சரி. போயிட்டு வாங்க. (செவ்வாயைப் பார்த்து) இங்கே பாரு, செவ்வா, நீ எதையோ நெனச்சுக் குழப்பிக்கிட்டு இருக்கேன்னு நெனக்கறேன். ஒங்கப்பாவுக்குத்தான் ஒடம்பு சரியாயிடுச்சே. வேற ஏதாவது பிரச்னையா? எதுவா இருந்தாலும், மனசைக் குழப்பிக்கறதில அர்த்தம் இல்ல. தெளிவா இரு. மனசை தைரியப்படுத்திக்க. ஆத்தா நம்மைக் கைவிட மாட்டாங்கற நம்பிக்கையோட இரு. (ருக்குவிடம் திரும்பி) இங்க பாரு, ருக்கு. சும்மா அர்த்தமில்லாம சிரிச்சுக்கிட்டே இருக்காம, செவ்வாகிட்டப் பேசி அவ பிரச்னை என்னனு கேட்டு அவளைக் கொஞ்சம் சமாதானப்படுத்து!
(செவ்வாய், ருக்கு இருவரும் போகிறார்கள். பூசாரி மீண்டும் செவ்வாயை அழைக்கிறார்.)
பூசாரி: இங்க பாரு! நாகாத்தாளுக்கு ஊத்தப் பால் எடுத்துக்கிட்டு வந்துட்டு, ஊத்தாம மறந்து போய், பால் பாத்திரத்தை இங்கேயே வச்சுட்டுப் போறியே!
செவ்: ஆமாங்க. ஏதோ ஒரு ஞாபகத்தில மறந்துட்டேன்.
பூசாரி: ஞாபகத்தில மறப்பியா? வேடிக்கையா இருக்கு. அது சரி. கூட ஒத்தியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கியே, ஒண்ணுக்கும் உபயோகம் இல்லாம, அவளாவது சொல்ல மாட்டா!
செவ்: இங்க பாருங்க, பூசாரி ஐயா! நானும் அப்பேலேந்து பாத்துக்கிட்டிருக்கேன். என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும்.
பூசாரி: அடேயப்பா! பொல்லாத கோபம்! ஒன் கோவத்தை அடக்கத்தான் இந்த ஊரிலேயே பெரிய கோவக்காரன் ஒத்தன் இருக்கானே!
பூசாரி: அட இவ்வளவு வெவரம் தெரியாதவளா இருக்கியே! இந்த ஊருக்கே தெரியுமே, இவளுக்குப் புருசனா வரப் போறது யாருன்னு.
செவ்: இங்க பாருங்க, பூசாரி ஐயா. அப்புறம் எனக்கு நெசமாலுமே கோவம் வந்துரும்!
பூசாரி: ஒன் கோவத்தையெல்லாம் அந்த மாடசாமிகிட்ட காட்டிப் பாரு.
( செவ்வாய் வியப்புடன் ருக்குவைப் பார்க்க, ருக்கு வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.)
செவ்: ஓகோ! அப்படியா விஷயம்? என்னடி ருக்கு, எங்கிட்ட கூட சொல்லலியே நீ!
ருக்கு: போடி! அவர்தான் ஏதாவது சொல்றாருன்னா, நீயுமா?
பூசாரி: நான் சொன்னதை இல்லேன்னு சொல்லு, பாக்கலாம்.
ருக்கு: செவ்வா! வாடி, போகலாம். நேரமாயிடுச்சு!
(இருவரும் போகிறார்கள்.)
செவ்: டீ ருக்கு! எத்தனை நாளாடி இது?
ருக்கு: போடி! நீயுமா இப்படி?
செவ்: பின்னே, பூசாரி சொன்னதெல்லாம் பொய்யா?
ருக்கு: யாருக்குத் தெரியும்?
செவ்: ஒனக்குத்தானே தெரியும், ஒன் மனசில என்ன இருக்குன்னு!
ருக்கு (சற்று ஏமாற்றத்துடன்): எம் மனசில இருக்கறது, பூசாரி சொல்றது இதெல்லாம் இருக்கட்டும் . சம்பந்தப்பட்ட ஆளு மனசில என்ன இருக்கோ!
செவ்: அப்படி ஒத்துக்கடி, கள்ளி! நீ கவலைப்படாதே! மாடசாமி அண்ணன்கிட்ட நான் பேசறேன்.
ருக்கு: அது ஒரு முசுடு. அது யார் சொன்னாலும் கேக்காது. புடிச்சா ஒரே புடிதான். அந்த ஆளுக்கு என்னைப் புடிக்கல. அன்னிக்கே என் பல்லை உள்ளே தள்ளிடுவேன்னு சொல்லல?
செவ்: பொண்டாட்டியா வரப் போறவளை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திப்பாக்கணுங்கறதுக்காக அப்படிச் சொல்லி இருப்பாரு.
ருக்கு: நீயும் சேந்து என்னைக் கேலி பண்ணு. கடைசியில, அது இவளை யாரு கட்டிப்பான்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுச்சுன்னா, அப்புறம் என்னால ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க முடியாது.
செவ்: ஒன்னை வேணாம்னு சொல்றதுக்கு, அதுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கணும்!
ருக்கு: பாத்தியா, மறந்துட்டேன். பூசாரி சொன்னப்பறம்தான் நானே கவனிச்சேன். நீ ஏன் ஒரு மாதிரி இருந்த?
செவ்: அப்படி எதுவும் இல்ல.
ருக்கு: பாத்தியா? எங்கிட்ட விஷயத்தைக் கறந்துக்கறியே தவிர, ஒன் விஷயத்தைச் சொல்ல மாட்டேங்கற பாரு!
செவ்: ஏதாவது இருந்தாதானேடி சொல்றதுக்கு?
ருக்கு: பின்ன ஏன் ஒரு மாதிரி இருந்தியாம்?
செவ்: ஒண்ணுமில்ல.
ருக்கு: ஒன்னை வெட்டிப் போடணுண்டி!
காட்சி 10
பொன்: ஏண்டா தம்பி! படிச்சு முடிச்சுட்டு என்ன செய்யப் போறதா உத்தேசம்?
துரை: படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே! அப்புறம் என்ன செய்யறதுங்கறதை அப்புறம்தான் யோசிக்கணும். என்ன, நல்லதா ஒரு வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆக வேண்டியதுதான்.
பொன்: நீ வேலைக்குப் போயிட்டா, நம்ம நெலத்தையெல்லாம் யாரு பாத்துக்கறது?
துரை: ஏண்ணே? நீ இங்கதானே இருக்கப் போற!
பொன்: இருக்கப் போறேன்தான்! ஆனா, எனக்கப்புறம், நீயும் உன் பிள்ளைகளும்தானே பொறுப்பேத்துக்கணும்? ஒனக்கே வெவசாயத்தில அக்கறை இல்லாததால, ஒண்ணுமே தெரியாம வளர்ந்துட்ட. நீயும் விவசாயத்தில பழகினாத்தானே, ஒன் பிள்ளைகளையும் பழக்க முடியும்? கொஞ்சம் அசந்தா, இந்த ஊர்ப்பசங்க ஒன்னை உசிரோட முளுங்கிடுவாங்க!
துரை: அண்ணே! நானே ஒங்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். தப்பா நெனச்சுக்க மாட்டேன்னு நெனக்கறேன்... நம்ம வயல்ல வேலை செய்யறவங்ககிட்ட நீ ரொம்பக் கடுமையா நடந்துக்கறியாமே!...கேள்விப்பட்டேன்.
பொன்: யார் மூலமா கேள்விப்பட்ட?
துரை: இல்ல, இந்தப் பத்து நாளா பல பேர்கிட்ட பேசினதில, பொதுவா எனக்கு இது புரிஞ்சது. ஆனா, வெளிப்படையா யாரும் சொல்லல. ஒங்க மேல எல்லாரும் விரோதம் பாராட்டற அளவுக்கு அவ்வளவு கடுமையா நடந்துக்கணுமா என்ன?
பொன்: நீ இதைக் கேட்டதில எனக்கு சந்தோஷம்தாண்டா! ஏன்னா, மொதல் தடவையா நம்மளோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கறதில நீ அக்கறை காட்டி இருக்கே! சொல்றேன். நம்மகிட்ட வேலை செய்யறவங்ககிட்ட நான் கடுமையா நடந்துக்கறது உண்மைதான். இல்லேன்னா, அவங்க நம்ம கட்டுப்பாட்டில இருக்க மாட்டாங்க. ஏற்கெனவே, ஊர்ல சில பேரு சங்கம் அது இதுன்னு பேசிக்கிட்டுத் திரியறாங்க. நாளைக்கு வயலை அறுத்து, விளைச்சலை அவங்களே எடுத்துக்கிட்டாக் கூடக் கேள்வி முறை இல்லாம போயிடும். அவங்களை ஒரு பயத்தோட வச்சிருக்கணும். அப்பதான், எதையும் செய்யறதுக்கு முன்னால, பசங்க கொஞ்சம் யோசிப்பாங்க. இந்த ஊர்ல பெரிய மிராசுதார்னு நான் ஒத்தன்தான் இருக்கேன். மத்த சின்ன மிராசுகள்ளாம் நடுங்கிச் சாகறாங்க. என்னைப் பொருத்தவரையிலும், நான் அண்டை அசல் கிராமங்கள்ள கொடுக்கற மாதிரி கரெக்டா கூலியைக் கொடுத்துடறேன். அதைத் தவிர, ஒரு அவசரம், ஆபத்துன்னா, தாராளமா உதவி செய்யறேன். இதுக்கு மேல அவங்க எங்கிட்ட என்ன எதிர்பாக்க முடியும்? நான் யாரையாவது கட்டி வச்சு அடிச்சிருக்கேனா, ஆளை வச்சு ஒதைச்சிருக்கேனா, குடிசைகளுக்கு நெருப்பு வச்சிருக்கேனா, என்ன செஞ்சிருக்கேன்? தொழிற்சாலையில வேலை செய்யறவங்க முதலாளியை மதிச்சு, வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செஞ்சுட்டுப் போறாங்க. முதலாளியைப் பாத்தா சலாம் போடறாங்க. ஏன், அவங்களோட மேலதிகாரிகளா முதலாளி நியமிச்ச ஆளுங்களுக்குக் கூட சலாம் போடறாங்க. ஆனா, நிலச் சொந்தக்காரன்னா, இவங்களுக்கு இளப்பம்! உழறவனுக்குத்தான் நிலம் சொந்தம்னு வீராப்புப் பேச்சு. இதுக்கெல்லாம் எடம் கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் ஒன்னையும் கிராமத்துக்கு வந்துடுன்னு நான் சொல்லிக்கிட்டிருக்கேன்.
துரை: எனக்கு இதெல்லாம் ஒத்து வராதுண்ணே!...ஆமாம், நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டியதுதானே?
பொன்: எத்தனை தடவைடா கல்யாணம் கட்டிக்கறது? பொம்பளை அறுத்துப் போனா, மொட்டை அடிச்சு, மூலையில ஒக்காத்தி வைக்கறாங்க. ஆம்பளைன்னா, அஞ்சாறு பேரைக் கட்டிக்கிட்டாக் கூடத் தப்பு இல்லையா?
துரை: ஒரு பக்கம், பழமையான கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி பேசற. இன்னொரு பக்கம், ரொம்பப் புரட்சிகராமாப் பேசற!
பொன்: இங்க பாரு. இந்தப் பழமை, புதுமை, புரட்சி அப்படின்னெல்லாம் நான் ஆராய்ச்சி பண்றதில்லை. என் மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யறேன். தப்புன்னு படறதைச் செய்யறது இல்ல. அவ்வளவுதான்.
துரை: நீ சொல்ற மாதிரியெல்லாம், பொம்பளைங்க நிலைமை இந்தக் காலத்தில அவ்வளவு மோசமா இல்ல, அண்ணே! அதனால, அதைக் காரணம் காட்டி, மறு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ சொல்றது அவ்வளவு பொருத்தமா இல்ல.
பொன்: எனக்கென்னவோ, மறு கல்யாணம் பண்ணிக்கறது அவசியம்னு தோணல. ஒருவேளை, நீ நிரந்தரமா இந்த கிராமத்தை விட்டுப் போயிட்டா, நம்ம சொத்தைப் பாதுகாக்க ஒரு வாரிசு வேணுங்கறதுக்காக நான் மறு கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுக்கலாம். ஆனா, இப்ப அப்படிப்பட்ட உத்தேசம் இல்ல. அது இருக்கட்டும். நான் ஒரு முட்டாள். நீதான் பிளேட்டை மாத்திப் போடறேன்னா, நானும் கேட்டுக்குட்டே இருக்கேனே! நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?
துரை: படிப்பு முடியட்டும், அண்ணே1
பொன்: படிப்பு கெடக்குது படிப்பு! கல்யாணம் கட்டிக்கிட்டா, அப்புறம் படிப்பு மூளையில ஏறாமப் போயிடுமா என்ன?
துரை: கல்யாணத்துக்கு அப்படி என்னண்ணே அவசரம்?
பொன்: சரி. ஒன் இஷ்டம். இன்னும் எத்தனை நாள் லீவு இருக்கு?
துரை: இன்னும் ஒரு வாரம் இருப்பேன்.
பொன்: (காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பி): யாரு? செவ்வாயா? ஒன் அப்பா இன்னிக்கு ஏன் வேலைக்கு வரல?
செவ்: அதாங்க சொல்லிட்டுப் போக வந்தேன். ஊர்ல என் அத்தை புருசன் செத்துட்டாருன்னு சேதி வந்துச்சு. அதான் அப்பா இருட்டோட கெளம்பிப் போயிட்டாரு. காலையில ஒங்களை எழுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான் எங்கிட்ட சொல்லித் தகவல் சொல்லச் சொன்னாரு.
பொன்: அடாடா! கையில பணம் காசு ஏதாவது எடுத்துக்கிட்டுப் போயிருக்கானா? தங்கச்சி புருசன் சாவுக்குச் சீர் செய்யணுமே!
செவ்: அவர்கிட்ட ஏதுங்க காசு? அங்கே போயி ஏதாவது கடன் வாங்கித்தான் செய்யணும்.
பொன்: சரி, செவ்வா! நீ போய் மாட்டுக்கெல்லாம் தீனி வச்சு, தண்ணி காட்டிட்டு வா. நானும் வயக்காட்டுக்குக் கெளம்பணும். நேரமாயிடுச்சு. ஏண்டா, தம்பி! நீயும் வாயேண்டா என்னோட.
துரை: இல்லேண்ணே! நீ போயிட்டு வா. நான் கொஞ்சம் படிக்க வேண்டி இருக்கு.
பொன்: சரி. வீட்டில யாரும் இல்ல. ஜாக்கிரதை. கதவைத் தாப்பா போட்டுக்க. வீட்டைத் தொறந்து போட்டுட்டு எங்கேயாவது போயிடாதே.
துரை: தாப்பா போட்டுக்கறேன், அண்ணே1
(துரை வாயிற்கதவைத் தாளிட்டு விட்டுத் தொழுவத்துக்கு வருகிறான்.)
துரை: செவ்வா!
செவ் (திடுக்கிட்டுத் திரும்புகிறாள்): நீங்களா!
துரை: யாரு செத்துப் போயிட்டதா சொன்ன?
செவ்: என் அத்தை புருஷன்.
துரை: ஒன் அத்தைக்குப் புள்ளைங்க இருக்காங்களா?
செவ்: ஓ!
துரை: அப்ப ஒன்னைக் கட்டிக்கறதுக்கு ஆள் இருக்குன்னு சொல்லு.
செவ்: ஆமாம், இருக்காங்க. ரெண்டு பசங்களுக்கும் என்னைக் கட்டிக்கறதில போட்டி. (சிரித்து) என் கழுத்தைக் கட்டிக்கிட்டுத் தொங்கினாங்கன்னா, கீழ எறங்கவே மாட்டாங்க.
துரை (சிரிக்கிறான்): ஓ, சின்னப் பசங்களா? அப்ப உனக்கு முறைப்பையன் யாரும் இல்லைன்னு சொல்லு.
செவ்: ஏன் சின்னையா எப்பவும் என் கல்யாணத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்களே, நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறதா உத்தேசம்?
துரை: கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னோட அண்ணன் தெனம் சொல்லிக்கிட்டே இருக்காரு. இப்ப கூட, நீ வரதுக்கு முன்ன அதைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தாரு. (சட்டென்று அவளிடம் நெருங்கி வருகிறான்.) செவ்வா! ஒன் மனசில வேற யாரும் இல்லேன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் என்னைக் கட்டிக்க ஒனக்கு இஷ்டமான்னு ஒன்னைக் கேக்கலாம்னுட்டுத்தானே ஒன்னை இவ்வளவு தூரம் சுத்தி வளைச்சுக் கேக்கறேன். ஒனக்குப் புரியலியா?
செவ் (திகைத்து): சின்னையா! நீங்க...நான் பட்டிக்காடுங்க. ஏழை. ஒங்களை அண்டிப் பொழைக்கறவ. நீங்க படிச்சிருக்கீங்க. ஒங்க படிப்புக்கும், பழக்கத்துக்கும்...
துரை: இங்க பாரு, செவ்வா! இது மாதிரியான பேச்செல்லாம் வேண்டாம். நான் டவுன்ல எத்தனையோ பெண்களைப் பாத்திருக்கேன். அவங்க எல்லாரையும் விட்டுட்டு, ஒன்னைத்தானே வந்து கேக்கறேன். இதிலேந்தே என் மனசு ஒனக்குப் புரியலியா? (அவள் தோள்களை மெதுவாகத் தொடுகிறான். அவள் மனதில் அந்தக் கனவு வந்து போகிறது. சட்டென்று தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.)
செவ்: ஐயா... எனக்கு ரொம்ப...ஒரே குழப்பமா இருக்குங்க...நான் அப்புறமா சொல்றேங்க.
துரை: இதை விட்டா வேற எந்த சந்தர்ப்பம் எப்ப கெடைக்கும்? இந்த கிராமத்தில நாம சந்திச்சுப் பேச முடியுமா? சரி...நான் இப்ப உள்ள போறேன். நீ ஒன் வேலையை முடிச்சுட்டு வா. அப்புறம் ஒன் முடிவைச் சொல்லு.
செவ் (குழப்பத்துடன்): சரிங்க...ஒண்ணே ஒண்ணுங்க...ம்...நீங்க டவுன்ல இருக்கற மாதிரி சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு நில்லுங்க. அப்பவும் இந்த வார்த்தையைச் சொன்னீங்கன்னா, நான் நம்புவேன்.
துரை (சிரிக்கிறான்): அட, இதென்ன செவ்வா? டிரஸ் மாறினா, ஆளும் மாறிடுவாங்களா என்ன? சரியான பைத்தியம் நீ. சரி. உன் இஷ்டம். (சட்டென்று அவளுடைய இடையை அணைத்து, அவள் காதில் முத்தம் கொடுக்கிறான். அவள் காதருகில்) நல்ல முடிவைச் சொல்லு, செவ்வா!)
(செவ்வாய் விதிர்விதிர்த்து நிற்கிறாள்.)
(காட்சியின் தொடர்ச்சியில், செவ்வாய் வீட்டுக்குள் வருகிறாள். கூடத்தில் துரை பேண்ட், சட்டை அணிந்து, கருப்புக் கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறான். கையில் சிகரெட். செவ்வாய்க்கு அந்தப் பழைய கனவு மீண்டும் வந்து, அது நிஜமானதாக உணர்கிறாள்.)
துரை (அவளுடைய கையைப் பற்றி): வா! உள்ளே போய்ப் பேசலாம். தனது அறைக்குள் அழைத்துச் சென்று, கட்டிலில் உட்கார்த்தி வைக்கிறான்.)
துரை: என்ன செவ்வா?
செவ்: ...ஏங்க...நீங்க சொன்னதெல்லாம் நெசந்தானா?
துரை: இப்ப ஒன்னைத் தொடறது கூடவா பொய்? ஒன்னைக் கிள்றேன் பாரு. வலிக்குதா? அப்ப நெசம்தானே?
செவ்: எனக்கு ...என்னவோ... எல்லாம் ஒரே குழப்பமா...நம்ப முடியாம கனவு மாதிரி...நீங்க... நான்... எப்படி?
(துரை மெதுவாக அவளை அணைத்துக் கொள்கிறான். முதலில் சற்றுத் தயங்கும் செவ்வாய் ஒருவித மயக்கத்தில் அவன் விருப்பத்துக்கு ஈடு கொடுக்கிறாள்.)

காட்சி 11
(ஒரு மரத்தடி. மாடசாமி உட்கார்ந்திருக்கிறான். ஒரு மாங்காயைக் கடித்தபடி, ருக்கு வருகிறாள்.)
ருக்கு: அட, நம்ப தலைவரு!
மாட: இதென்ன, தலைவர் அது, இதுன்னெல்லாம் புதுசா இருக்கு?
ருக்கு: ஆமாம். நம்ம ஊர்ல இருக்கற ஒரே தலைவர் நீதானே?
மாட: இங்க பாரு. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. 'அண்ணே'ன்னு கூப்புடு.
ருக்கு: ஆங்! அன்னிக்கு செவ்வா அண்ணன்னு கூப்பிட்டப்ப, எனக்கு இந்த மரியாதையெல்லாம் புடிக்காதுன்னியே!
மாட: ஓ, அதுவா? அன்னிக்கு... (தடுமாறுகிறான்.) ...சரி. அப்ப, என் பேரைச் சொல்லிக் கூப்புடு.
ருக்கு (வெட்கத்துடன்): அது எப்படிக் கூப்பிடறதாம்?
மாட: ஏன்?...சரி. எப்படியோ கூப்பிட்டுத் தொல. ஒன்னோட பேச மனுஷனால முடியாது.
ருக்கு: அப்ப, நீ எப்படிப் பேசற?
மாட: சரி. இப்ப இங்க எதுக்கு வந்த?
ருக்கு: அடங்கப்பா! அதிகாரத்தைப் பாரு. இந்த மரத்தடியை ஒனக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்காங்க போலருக்கு. ஏன், நான் இங்க வரக் கூடாதா?
மாட: சரி, வா. வந்து இந்த மரத்தில தூக்கு மாட்டிக்கிட்டு வேணும்னாலும் தொங்கு. நான் கேக்கல. ஆனா, என் உயிரை எடுக்காதே!
ருக்கு: ஒன் உயிர் எனக்கு எதுக்குய்யா? (தனக்குள்) சே! கொஞ்சம் கூட ஆரதவாப் பேசத் தெரியாத ஆளு. எப்பப் பாரு, எண்ணெயில விழுந்த கடுகு மாதிரி வெடிச்சுக்கிட்டு!
மாட: என்னம்மா முணுமுணுப்பு?
ருக்கு: ஒண்ணும் இல்ல. சரி. மாங்கா திங்கறியா?
மாட: ஒண்ணும் வேண்டாம். எனக்கென்ன மசக்கையா?
ருக்கு: ம்... பேச்சைப் பாரு! மசக்கை வந்தவங்கதான் மாங்கா திங்கணுமா? ஏன், நான் திங்கறேனே! எனக்கென்ன மசக்கையா?
மாட: நான் என்னத்தைக் கண்டேன்?
ருக்கு: ஹேய்! அப்புறம், அளுது ஊரைக் கூட்டிருவேன். என்னப் பேச்சுப் பேசற?
மாட: இந்தாம்மா, மொதல்ல நீ இங்கேந்து போ, இல்லை, நான் எழுந்து போயிடறேன். (எழுந்து செல்ல எத்தனிக்கிறான்.)
ருக்கு: யோவ்! நில்லுய்யா. மாங்கா திங்கறியான்னு கேட்டா, அதுக்குப் போய்க் கோவிச்சுக்கிட்டு எழுந்து போறேங்கறியே! நாளைக்கு ஒன் பொண்டாட்டி ஒன்னை சோறு திங்கக் கூப்பிட்டா, அவளை அடிக்கப் போயிடுவ போலருக்கே!
மாட: ம்..அது என் பொண்டாட்டியா வரப் போறவ பட வேண்டிய கவலை. ஒனக்கேன்?
ருக்கு: யாரு கண்டாங்க? ஒருவேளை நானே ஒனக்குக் களுத்தை நீட்டினா?
மாட: நீ பாட்டுக்கு ஒட்டச்சிவிங்கி மாதிரி கழுத்தை நீட்டிக்கிட்டு நிக்க வேண்டியதுதான். நீட்டின கழுத்துல நான் தாலி கட்டினாத்தானே?
ருக்கு (அழுகையுடன்): ஏன்யா, என்னைக் கண்டா ஒனக்கு இவ்வளவு இளப்பமா?
மாட: இங்க பாரும்மா! நானும் ரொம்ப நேரமா கோவத்தை அடக்கிக்கிட்டிருக்கேன். எங்கிட்ட மறுபடி மறுபடி நீ இது மாதிரி பேசிக்கிட்டிருக்காதே! அப்புறம், ஆத்திரத்தில நான் என்ன செய்வேன்னே தெரியாது.
ருக்கு: தெரியும்யா எனக்கு... நான் ஒரு அனாதை, சாதி தெரியாத பொண்ணுன்னுதானே நீ இப்படிப் பேசறே?
மாட: ருக்கு! நீ அனாதைங்கறதுக்காக நான் ஒன்னை மட்டமா நெனைக்க மாட்டேன். ஒன்னோட ஜாதியை மட்டும் இல்ல, வேற யாரு ஜாதியைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. எனக்குத் தெரிஞ்சு, இந்த ஒலகத்தில ரெண்டு ஜாதிதான் இருக்கு. ஒண்ணு நம்மளை மாதிரி பாடுபட்டு உழைக்கிற பாட்டாளி ஜாதி. இன்னொண்ணு நம்ம உழைப்பில வயிறு வளக்கற முதலாளிங்க ஜாதி.
ருக்கு: ஏன்யா, ஒரு பொண்ணு இவ்வளவு தூரம் மனசைத் திறந்து சொன்னப்பறமும், நீ இப்படி அலட்சியமாப் பேசலாமா?
மாட: நீ மனசைத் தொறந்து கேட்டுட்டேங்கறதுக்காக நான் சரின்னு சொல்லிடணுமா? எனக்குன்னு வேற எண்ணம் இருக்கலாம், இல்ல?
ருக்கு: அது என்னையா, எண்ணம்? அதையாவது சொல்லு.
மாட: அதையெல்லாம் ஒங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது.
ருக்கு: அப்படின்னா, என்னைக் கட்டிக்க வேண்டியதுதானேய்யா?
மாட: ஒன்னோட பெரிய வம்பாப் போச்சே! என்னால ஒனக்குப் புரிய வைக்க முடியாது. நான் செவ்வாகிட்ட சொல்லி, ஒனக்குப் புரிய வைக்கறேன். நீ இப்ப மொதல்ல வீட்டுக்குப் போ.
ருக்கு: போறேன்யா, போறேன். இந்த விஷயம் செவ்வாய்க்கும் தெரியும். இந்த ஊர்ல எல்லாருமே நீதான் எனக்குப் புருஷன்னுதான் பேசிக்கறாங்க.
மாட: அப்படிப் பேசறவங்களை என் முன்னாடி வந்து பேசச் சொல்லு. அவங்க பல்லை ஒடைக்கறேன்.
ருக்கு: ஆமாம்யா! மத்தவங்க பல்லை ஒடைக்கறதிலேயே இரு.... அதான் ஒன் கட்சிக் கொடியில சுத்தியல் படத்தைப் போட்டு வச்சிருக்க போலருக்கு!
மாட: ஆமம், போ. வெவரம் கெட்ட பொண்ணு!... என் கழுத்தை அறுக்குது.
(மாடசாமி போகிறான்.)
காட்சி 12
(மாடசாமி தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே செவ்வாய் வருகிறாள். அவளை கவனிக்காமல், மாடசாமி பேப்பரால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான்.
செவ்வாய் அவன் அருகே உட்காருகிறாள். மாடசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான்.)
மாட: அடேடே! செவ்வாயா? என்ன இது ஆச்சரியமா இருக்கு?
செவ்: எதுண்ணே அதிசயம்?
மாட: பாத்தியா? இந்த அண்ணே போட்டுப் பேசறதெல்லாம் வேண்டாம்னு அன்னிக்கே சொல்லி இருக்கேன் இல்ல?
செவ்: ஆமாம், சொன்ன. ஆனா, ருக்குகிட்ட மட்டும் உன்னை அண்ணேன்னுதான் கூப்பிடணும்னு சொன்னியாமே!
மாட: ம்...ஆமாம். அது ஒரு ரெண்டுங்கெட்டான். ஒங்கிட்ட வந்து சொல்லி அழுதுச்சாக்கும்?
செவ்: ஆமாண்ணே, தெரியமதான் கேக்கறேன். ருக்குவைக் கட்டிக்க உனக்கு ஏன் கசக்குது?
மாட: இந்தக் கசப்பு, இனிப்பு பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. அதைக் கட்டிக்க எனக்கு இஷ்டம் இல்ல. அவ்வளவுதான்.
செவ்: அதுதான் ஏன்னு கேக்கறேன்.
மாட: இதுக்கெல்லாம் என்னால காரணம் சொல்ல முடியாது, செவ்வா! என்னைப் பொருத்தவரை, எனக்குப் பொண்டாட்டியா வரவ எனக்கு அனுசரணையா நடந்துக்கணும். எப்பப் பாத்தாலும் எனக்கு எரிச்சல் மூட்டிக்கிட்டு இருக்கற பொண்ணைக் கட்டிக்கிட்டு என்னால போராடிக்கிட்டிருக்க முடியாது. ஏற்கெனவே வெளியில போராட்டம். அதோட, வீட்டிலேயும் போராட்டம்னா என்னால தாங்க முடியாது.
செவ்: ருக்கு நீ நெனக்கற மாதிரி இல்ல. ஒம்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கா தெரியுமா? ஒனக்கு அவளை விட அனுசரணையான பொண்ணு வேற யாரும் கெடைக்க மாட்டாங்க.
மாட: சரி. விடு செவ்வா! நான் கல்யாணம் கட்டிக்கறதுன்னு முடிவு பண்ணினப்பறம், இதைப் பத்திப் பேசலாம்.
செவ்: இது மாதிரி சொல்லித் தப்பிச்சுக்க நான் விட மாட்டேன். கல்யாணம் எப்ப வேணும்னா செஞ்சுக்க. ஆனா, ருக்குவைத்தான் கட்டிப்பேன்னு ஒரு வார்த்தை சொல்லு. நான் இப்பவே இந்த இடத்தை விட்டுப் போயிடறேன்.
மாட: நான் அப்படி சொல்லப் போறதில்ல. நீ வேணா போகாம இங்கேயே இருந்துடு! எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை!
செவ்: ஆமாம், ஒன் மனசில என்னதான் இருக்கு?
மாட: ஆங்...அப்படிக் கேளு. இவ்வளவு நேரம் உன் சிநேகிதி மனசைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தியே தவிர, என் மனசில என்ன இருக்குங்கறதைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை காட்டலியே! இப்பதான் என் மனசில கூட ஏதாவது எண்ணம் இருக்கான்னு புரிஞ்சுக்க முயற்சி செய்யற. அந்த மட்டும் சந்தோஷம். நீ கேட்டதனால, நான் வெளிப்படையாவே சொல்றேன். என் மனசில இன்னொரு பொண்ணை நெனச்சுக்கிட்டிருக்கேன்.
செவ்: அட! ஒன் மனசில இது மாதிரி எண்ணங்களுக்கெல்லாம் கூட எடம் இருக்கா?
மாட: நீங்கள்ளாம் நான் ஏதோ கலகக்காரன், சண்டையைத் தூண்டி விடறதிலேயே குறியா இருக்கறவன்னே நெனச்சுக்கிட்டிருக்கீங்க. எனக்கு ஒரு மனசு இருக்குங்கறதையே நீங்க யாரும் புரிஞ்சுக்கல. மத்தவங்க கஷ்டப்படறதைப் பாத்து என்னால பொறுத்துக்க முடியாததாலதான், நான் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசறேன். இல்லேன்னா, நான் ஒரு தனிக்கட்டையா இருக்கறதுக்கு, ஏதோ ஒரு வேலையை செஞ்சுக்கிட்டு, கிடைக்கிற கூலியில வயிறாறத் தின்னுட்டு, சாராயக் கடையிலேயும், சினிமாக் கொட்டாயிலேயும் குடியிருந்துக்கிட்டு இருக்க மாட்டேனா?
செவ்: ஒன்னோட நல்ல மனசு எனக்குத் தெரியாதா, அண்ணே? ஆனா, ஒரு பொண்ணை நெனைச்சு உருகிற அளவுக்கு நீ இருப்பேன்னு நான் நெனக்கல. ஆமாம். யாரு அந்தப் பொண்ணு?
மாட: அது...அதை இப்ப சொல்ல விரும்பல, செவ்வா! பின்னால ஒரு சந்தர்ப்பத்தில நானே அதை ஒங்கிட்ட சொல்றேன்.
செவ்: இதைத்தான் எங்கிட்ட சொல்றதா ருக்குகிட்ட சொன்னியா?
மாட: ஆமாம். ஒங்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னுதான் நெனச்சேன். ஆனா, என்னவோ ஒரு தயக்கம். அதனாலதான் அந்தப் பொண்ணு யாருங்கறதை இப்ப நான் சொல்லல. ஆமாம், நீ ஏன் ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரி இருக்க?
செவ் (திடுக்கிட்டு): அப்படி எதுவும் இல்லையே1
மாட: இல்ல. ஏதோ இருக்கு. ஒன் கண்ணு செவந்துருக்கு. சரியாத் தூங்கலியா?
செவ்: அ...ஆமாம்...சரியாத் தூக்கம் வல்ல.
மாட: அப்ப ஆஸ்பத்திரிக்குப் போறதுதானே? தூக்கம் வரதுக்கு மாத்திரை ஏதாவது கொடுப்பாங்களே!
செவ்: ஆமாம்...இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பேன். அப்பவும் சரியா வரலேன்னா, தூக்க மாத்திரைதான் வழி... நான் வரேன் அண்ணே! ருக்குதான் பாவம். ரொம்ப ஏங்கிப் போவா.
(செவ்வாய் போகிறாள். மாடசாமி அவளை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறான்.)
மாட (தனக்குள்): செவ்வா! என் மனசில நீ இருக்கறது தெரியாம, இன்னொருத்திக்காக நீயே தூது வரியே!
காட்சி 13
துரை: என்ன செவ்வா, வெளைஞ்ச பயிர் மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நடந்து வர. எதிரில யாராவது வந்திருந்தா, அவங்க மேல மோதிக்கிட்டிருப்ப போலருக்கே!
செவ் (பெருமூச்சு விடுகிறாள்): ...என்ன சொன்னீங்க?... வெளைஞ்ச பயிர்தான் வளையணும். ஆனா, பச்சைப் பயிர்ல கல்லைக் கட்டித் தொங்க விட்டா, அது கூடத் தொங்கிப் போயிடும்யா!
துரை: செவ்வா! என்ன இது? ஒரு மாதிரி பேசறியே!ஏதாவது வருத்தத்தில இருக்கியா என்ன? இப்ப என்ன நடந்து போச்சு?
செவ்: என்ன சின்னையா, இப்படிக் கேக்கறீங்க!...இன்னும் என்ன நடக்கணும்?...இப்படி நடந்திருக்கலாமா? நான் எப்படி இது மாதிரி நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியலியே! இப்ப, என்னால வெளியவே வர முடியல. அவ்வளவு அவமானமா இருக்கு.
துரை: செவ்வா! நடந்ததுக்காக நானும் ரொம்ப வருத்தப்படறேன். நானும் அதை எதிர்பாக்கல. ஏதோ ஒரு வேகத்தில நடந்து போச்சு. ஆனா, நீ நெனச்சு நெனச்சு கொமைஞ்சு போற அளவுக்கு நெலைமை இல்ல. .. நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். கல்யாணத்துக்கு முன்னாலேயே கர்ப்பமாயிடுவியோன்னு பயப்படற போலருக்கு. அப்படியெல்லாம் நடக்காது. நான் ரொம்ப முன்னெச்சரிக்கையாத்தான் இருந்திருக்கேன்.
செவ்: ஏன்யா, கர்ப்பமா ஆகலேன்னா, அதனால தப்பே பண்ணலன்னு ஆயிடுமா? மத்தவங்களுக்கு வேணும்னா, நடந்தது தெரியாம இருக்கலாம். ஆனா, என் வரையிலும் நான் கெட்டுப் போனது போனதுதானே? நீங்க முன்னெச்சரிக்கையா இருந்த மாதிரி, நான் இல்லாம போயிட்டேனே!
துரை: நான்தான் சொல்றேனே, நான் செஞ்சது தப்புதான்னு. அப்புறம் ஏன்...சரி, நடந்தது நடந்து போச்சு. அதை மறந்துட்டு ஒன் வேலையைப் பாரு. அதையே நெனச்சுக்கிட்டிருக்காதே. நீ எப்பவும் அதையே நெனச்சுக்கிட்டு, எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தா, அதை வச்சே இந்த ஊர்க்காரங்க வம்பு பேச ஆரம்பிச்சுடுவாங்க.
செவ்: அது இருக்கட்டும், சின்னையா... நம்ம கல்யாண விஷயமா என்ன ஏற்பாடு பண்ணப் போறீங்க? பெரிய ஐயாகிட்டப் பேசினீங்களா?
துரை: பேசறேன், செவ்வா. அவரசப்படாதே! அண்ணன் இந்த அந்தஸ்து வித்தியாசம் எல்லாம் பாப்பாரு. மிராசுப் பையன் இன்னொரு மிராசுதார் வீட்டுப் பொண்ணைத்தான் கட்டிக்கணும்னு நெனப்பாரு. அதனால, அவர்கிட்ட போய் சட்னு இந்த விஷயத்தைப் பேசிட முடியாது. சந்தர்ப்பம் பாத்துத்தான் பேசணும். நேரம் வரட்டும்.
செவ்: நேரம் எப்பங்க வரது? ஒங்களுக்கு பயமா இருந்தா, பெரிய ஐயாகிட்ட நானே பேசறேன்.
துரை: நீ பேசப் போறியா? இதைப் பத்தியா? எப்படிப் பேசுவ?
செவ்: ஏன், நேரடியாக் கேக்கறேன்...இது மாதிரி ஒங்க தம்பி என்னைக் கட்டிக்க ஆசைப்படறாரு. எங்க கல்யாணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும்னு கேக்கறேன்.
துரை: கேட்டா, உடனே அண்ணன் சரின்னு சொல்லிடுவாரா?
துரை: ஒங்களைக் கூப்பிட்டுக் கேப்பாரு, இல்ல? அப்ப, நீங்க சொல்லலாமே!
செவ்: நீ ரொம்ப புத்திசாலி மட்டும் இல்ல, தைரியசாலியும் கூட. நீ சொல்றபடியே செய்யலாம். ஒங்கிட்ட என் அண்ணனுக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. அதனால, நீ கேட்டா, உடனே சரின்னு சொல்லிடுவாரு.
செவ்: அப்ப, இன்னிக்கே கேட்டுடறேன்யா...ம்...நான் கேக்கறதா, எங்கப்பாவை விட்டுக் கேக்கச் சொல்றதா?
துரை: நீயே கேளு, செவ்வா. அப்புறம், அண்ணனே ஒங்கப்பாவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லுவாரு.
செவ்: சரிங்க, சின்னையா! ஆனா, ஒங்க அண்ணன் ஒங்களைக் கேக்கறப்ப, நீங்க பயந்து நடுங்காம, ஒங்க மனசில இருக்கறதை ஒங்க அண்ணன்கிட்ட சொல்லணும். சொல்லுவீங்க, இல்ல? (குறும்பாகச் சிரிக்கிறாள்.)
துரை: சொல்லுவேன். ஆனா, அதுக்கு அச்சாரமா நீ ஒண்ணு தரணும்.
செவ் (தலை குனிந்து): அதான் என்னையே ஒங்களுக்குக் கொடுத்துட்டேனே!
துரை: அப்படின்னா, நீ என்னோட சொத்து. ஒன்னை நான் என்ன வேணும்னா செய்யலாம், இல்ல? (அவளை நெருங்கி அணைக்கிறான்.)
செவ்: விடுங்க. யாராவது பாத்துடப் போறாங்க. (கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஓடுகிறாள்.)
கனவுப் பாடல்
பெண்: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு
கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.
ஆண்: வானம் அங்கே அழுததுமே
பூமியில் இங்கே சந்தோஷம்
வானம் அழுத கண்ணீரால்
பூமிக்கு இங்கே அபிஷேகம்
ஒத்தரோட அழுகையால
இன்னொருத்தர் சந்தோஷம்
ரெண்டு பேர் சேர்ந்து சிரிச்சா
இயற்கைக்கே சந்தேகம்
வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு
கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.
பெண்: சூரியனும் பூமியும்
ஒண்ணாத்தான் சிரிக்கறாங்க
அவங்களைப் பிரிக்க
யார்தான் இங்கே இருக்காங்க?
நல்லவங்க எப்பவுமே
சேர்ந்துதானே சிரிப்பாங்க?
ஒத்தருக்குத் துன்பம் வந்தா
ஒண்ணா சேர்ந்து தடுப்பாங்க
வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு
கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.
ஆண்: வானத்துக்கும் பூமிக்கும்
பாலம் போடும் மழைத்தண்ணி
பாதி தூரம் நடக்கும்போதே
பாலம் அறுந்து தொங்கிடும்.
பெண்: நிரந்தரமாய்ப் பாலம் போடும்
சூரியனின் ஒளித்தடம்
பனித்துளியும் அதில நடந்து
புருஷன் வீடு போயிடும்.
இருவரும்: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு
கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.
இசை: musicful.ai
காட்சி 14
ருக்கு: இங்க பாருய்யா! கடைசியாக் கேக்கறேன். ஒன் முடிவைச் சொல்லிடு. என்னைக் கட்டிக்கறேனு சொன்னா, சரி. இல்லாட்டா, நான் பாம்புப் புத்துல கையை விட்டுடுவேன்.
மாட: போ! அதைச் செய், மொதல்ல. அந்தப் பாம்பாவது ஒன்னைக் கட்டிக்குதான்னு பாக்கலாம்... சே! இப்பிடியா ஒரு பொம்பளை கல்யாணப் பித்துப் பிடிச்சு அலையும்?
ருக்கு: நான் ஒண்ணும் கல்யாணப் பித்துப் பிடிச்சு அலையல. என்னைக் கட்டிக்கறேன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிடு, போதும். அப்புறம், நீ எத்தனை வருசம் காத்துக்கிட்டிருக்கச் சொன்னாலும், காத்துக்கிட்டிருக்கேன்.
மாட: அடாடா! ஒன்னோட பெரிய தொந்தரவாப் போச்சே! அதோ செவ்வா வருது. அதுதான் சரி, ஒனக்கு. செவ்வா!
(செவ்வாய் அவர்கள் அருகில் வருகிறாள்.)
செவ் (சிரித்தபடி): என்னண்ணே! ருக்குதான் இவ்வளவு தூரம் கேக்கறாளே, சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட வேண்டியதுதானே?
ருக்கு: செவ்வா! நீதாண்டி எனக்குத் தொணை. இந்த ஆளு எனக்குப் போக்குக் காட்டிக்கிட்டே இருக்காரு.
மாட: என்ன செவ்வா இது? நீ கூட இந்த ரெண்டுங்கெட்டானோட சேந்துக்கிட்டு இப்படிப் பேசறியே! நான்தான் அன்னிக்கே என் மனசில இருக்கறதை ஒங்கிட்ட சொன்னேனே!
செவ்: மாடசாமி அண்ணே! நீ ஒன் மனசில யாரையோ நெனச்சுக்கிட்டு இருக்கறதா சொன்னியே தவிர, அது யாருன்னு நான் கேட்டதுக்கு, பதில் சொல்லாம மழுப்பிட்டியே! அதிலேந்தே, ஒன் மனசில யாரும் இல்லேன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ருக்கு ஒரு அப்பாவிப் பொண்ணு. நீயோ எப்பவும் கட்சி கட்டிக்கிட்டு யாரோடயாவது சண்டை போட்டுக்கிட்டு நிக்கற. அதனால, ஒன்னைக் கட்டிக்கிட்டா, அவ சந்தோஷமா இருக்க மாட்டான்னு நெனச்சுப் பேசற போலருக்கு. பொம்பளை மனசு எப்படிப்பட்டதுன்னு ஒனக்குப் புரிஞ்சிருந்தா, நீ அப்படி நெனைக்க மாட்ட. ஒரு பொம்பளை ஒத்தனைப் புருசனா ஏத்துக்கிட்டான்னா, அவனோட சுகத்தையும், கஷ்டத்தையும் பத்தித்தான் நெனப்பாளே தவிர, தன்னோட கஷ்டத்தைப் பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்பட மாட்டாய்யா.
மாட: செவ்வா! நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போனா, என்ன அர்த்தம்? நான் அன்னிக்கு ஒங்கிட்ட சொன்னது முக்காலும் நெஜம்தான். நான் வேற ஒரு பொண்ணை மனிசில நெனச்சுக்கிட்டு இருக்கேங்கறது உண்மைதான்.
செவ்: அப்ப, அது யாருன்னு சொல்லு.
ருக்கு: சொல்லேன்யா? யாரு அவ? அவளை வெட்டிப் போடறேன்!
மாட: (ருக்குவிடம்) தே! சும்மாக் கிட. (செவ்வாயிடம் திரும்பி) செவ்வா! அதை இப்ப சொல்ல முடியாது. ஒங்கிட்ட தனியாத்தான் சொல்லணும்.
ருக்கு: யோவ்! தாலி கட்டப் போற பொண்ணுக்குத் தெரியாம, என்னய்யா ரகசியம் வேண்டிக் கிடக்கு?சொல்றதை இங்கேயே, இப்பவே ஒடைச்சு சொல்லு.
மாட: நீயா நான் தாலி கட்டப் போற பொண்ணு?
ருக்கு: வேற யாருக்காவது நீ தாலி கட்டிடுவியான்னு பாத்துடறேன். யாராவது வந்தா, அவ கழுத்தை வெட்டிப்புடுவேன்யா. கழுத்து இருந்தாதானே, நீ தாலி கட்டுவ?
மாட (கை கூப்பி): அம்மா, தாயே! நீ யாராவது கொலைகாரனாப் பாத்துக் கட்டிக்க. இது மாதிரி கழுத்தை வெட்டற பொம்பளையை எல்லாம் என்னால சமாளிக்க முடியாது.
ருக்கு: யோவ்!சொல்ல வந்ததைச் சொல்லாம, ஏன்யா சுத்தி வளைக்கற? யாருய்யா அந்தச் சிறுக்கி?
மாட: மரியாதையாப் பேசு, ருக்கு. அப்புறம் எனக்குக் கோவம் வரும். (செவ்வாயிடம் திரும்பி) செவ்வா, நான் ஒங்கிட்ட அப்புறமா...
செவ் (இடைமறித்து): இங்க பாருண்ணே! மனசில யாரையாவது நெனச்சுக்கிட்டிருந்தா, போட்டு ஒடைச்சுடு. இல்லேன்னா, நீ தட்டிக் கழிக்கறதுக்காகத்தான் இப்படிச் சொல்றேன்னுதான் நான் நெனப்பேன்.
மாட: சரி. சொல்லிடறேன். (சற்றுத் தயங்கி விட்டு) செவ்வா!நான் மனசில நெனச்சுக்கிட்டிருக்கறது ஒன்னைத்தான்.
(ருக்கு 'யோவ்' என்று கூவி விட்டு அதிர்ந்து நிற்க, செவ்வாய் பெரிதாகச் சிரிக்கிறாள்.)
செவ்: அண்ணே! இது ரொம்ப... என்னால சிரிப்பை அடக்க முடியல...நல்ல வேடிக்கை அண்ணே இது. பிள்ளையார் சாமி கதை தெரியுமா ஒனக்கு? தன்னோட அம்மா மாதிரி ஒரு பொண்ணு கெடச்சாத்தான் கட்டிப்பேன்னாராம். அதனாலதான், அவருக்கு இன்னி வரைக்கும் கல்யாணம் ஆகல. அது மாதிரிதான் இருக்கு நீ பேசறது.
மாட: செவ்வா! நான் சொன்னது...
செவ்: வெளையாட்டுக்குத்தானே? நல்ல வேடிக்கைண்ணே இது! இங்க பாரு, ருக்கு! ஒன் ஆளு ஒன்னை நல்ல ஏமாத்தப் பாக்கறாரு. அவரை விட்டுடாதே! கெட்டியமாப் புடிச்சுக்க.
(செவ்வாய் போகிறாள். ருக்கு 'யோவ், யோவ்!' என்று கெஞ்ச, மாடசாமி தலையில் கையை வைத்துக் கொள்கிறான். )
பொன்: என்ன செவ்வா?
செவ்: கொஞ்சம் அரிசி பொடைக்க வேண்டி இருக்கு. பொடைச்சுட்டுப் போறேன்.
பொன்: நேத்தே பொடைச்சுட்டே போலருக்கே!
செவ்: இல்லீங்க. அரிசி பொடைச்சுட்டேன். தவிடு மட்டும் புடைக்கணும்.
பொன்: சரி. பொடைச்சுட்டுப் போ.
(செவ்வாய் உள்ளே போகிறாள். முறத்தில் தவிட்டை ஒப்புக்குப் புடைத்துக் கொண்டிருக்கிறாள். வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறாள். சற்று நேரத்தில் பொன்னம்பலம் உள்ளே வருகிறார். கூடத்தைக் கடந்து உள்ளே போகிறவரை செவ்வாய் அழைக்கிறாள்.)
செவ்: ஐயா!
பொன்: என்ன செவ்வா?
செவ்: அந்த பெஞ்ச்சுல கொஞ்சம் குந்துங்க. ஒங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
பொன்: என்னம்மா, வீரய்யனுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?
செவ்: இல்லீங்க. இது வேற விஷயம்.
பொன்: சொல்லு.
(செவ்வாய் முந்தானையால் முகத்தின் வியர்வையைத் திரும்பத் திரும்பத் துடைத்துக் கொள்கிறாள்.)
செவ்: ஒண்ணுமில்லீங்க...வந்து...நம்ம சின்னையாவுக்கு எப்ப கல்யாணம் பண்ணப் போறீங்க?
பொன் (சிரித்து): அட! இதைக் கேக்கத்தான் இவ்வளவு யோசனையா? பாத்தியா? நீ கேக்கற. நீ யாரு? ஒரு வேலைக்காரப் பொண்ணு. ஒனக்கு இருக்கற அக்கறை அவனுக்கு இல்லியே! என்ன செய்யறது?...ம்...
செவ் (மென்று விழுங்கி): இல்லீங்க, இப்ப அவரு கல்யாணம் கட்டிக்கத் தயாரா இருக்காருங்க.
பொன்: ஒனக்கு எப்படித் தெரியும்?
செவ்: அது வந்து...அவரு...அவரு...என்னைக் கட்டிக்கறேன்னு சொல்றாருங்க.
பொன்: செவ்வா! பொம்பளைங்களை நான் தொட்டு அடிக்கறதில்ல. இதையே ஒங்கப்பன் கேட்டிருந்தான்னா, அவன் பல்லு மொத்ததையும் பேத்துட்டுப் புதுசா பல்லு கட்டிக்கடான்னு சொல்லிப் பணம் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இருப்பேன்!
செவ்: ஐயா!
பொன்: வாயை மூடுறி! தெருவில நிறுத்திப் பேச வேண்டிய கழுதையை எல்லாம் வீட்டுக்குள்ள கூப்பிட்டு, எனக்கு சமதையா வச்சுப் பேசறேன் பாரு, அது என்னோட தப்பு. மொதல்ல வெளியில போடி!
செவ்: ஐயா!
பொன்: உடனே போயிடு. இல்லேன்னா, எனக்கு வர கோவத்துக்கு, ஒன்னைப் புடவையை உருவிட்டு, வெத்து ஒடம்போட வெளியில தள்ளிடுவேன். பொம்பளையை வேற என்ன செய்யறது? ஆம்பளையா இருந்தா அடிச்சுடலாம்.
செவ்: ஐயா! கொஞ்சம் அளவாப் பேசுங்க. நான் ஒண்ணும் ஒங்ககிட்ட பிச்சை கேக்கல. ஒங்க தம்பிதான் எங்கிட்ட வந்து என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு. அதை ஒங்ககிட்ட கேக்கறதுக்கு அவருக்கு தைரியம் இல்ல. . அதனாலதான், நான் வந்து கேக்கறேன். ஒங்களுக்கு நம்பிக்கை வல்லேன்னா, என் முன்னாடியே உங்க தம்பியை அழைச்சுக் கேளுங்க!
பொன்: ஓஹோ! இவ்வளவு தூரம் என்னை எதித்துப் பேசற அளவுக்கு ஒனக்குத் திமிர் வந்துடுச்சா? ஒங்கிட்ட எனக்கென்னடி பேச்சு? போய், ஒங்கப்பனை வரச் சொல்லு. அவன் தோலை உரிக்கறேன்.
செவ்: ஐயா! மரியாதை தவறிப் பேசறதுக்கு எனக்கு விருப்பம் இல்ல. எங்கப்பாவை இதில ஏன் இழுக்கறீங்க?
பொன் (கேலியுடன்): பொண்ணோட அப்பன்கிட்டதானே சம்பந்தம் பேசணும்? பொண்ணுகிட்டயா பேசுவாங்க?
செவ்: மொதல்ல சம்பந்தம் பேசறதுக்கு ஒத்துக்கங்க. அப்புறம் எங்கப்பாவை அனுப்பி வைக்கறேன். அவர்கிட்ட நீங்க பாக்கு வெத்தலை மாத்திக்கலாம்... மொதல்ல ஒங்க தம்பியைக் கூப்பிட்டு, நான் சொல்றது உண்மையா இல்லியான்னு கேளுங்க.
பொன்: ஓ, அப்படியா? சரி. டேய், தொரை!...அவன் இங்கே இல்ல. அவன் வரட்டும். அப்புறம் பேசிக்கறேன். மொதல்ல, நீ வீட்டுக்குப் போ.
செவ்: இல்லீங்க. அவரு வர வரையிலேயும் நான் இங்கேயே இருக்கேன்.
(பொன்னம்பலம் ஏதோ சொல்ல வாயெடுக்க, , அதற்குள் துரை வீட்டுக்குள் நுழைகிறான்.)
பொன்: டேய் தொரை! அங்கேயே நில்லு. நான் கேக்கறதுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் உள்ளே வா! இதோ நிக்கறாளே இந்தக் கழுதையை, நீ காதலிக்கறியா? அவளை எங்கிட்ட அனுப்பி, ஒன்னோட கல்யாணத்தைப் பத்திப் பேசச் சொன்னியா?
(துரை செவ்வாயையும், பொன்னம்பலத்தையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறான்.)
செவ்: என்ன, சின்னையா? ஏன் தயங்கறீங்க? பளிச்சுன்னு சொல்லுங்க.
பொன்: நீ சும்மா இருடி! டேய், சொல்றா!
துரை: என்னண்ணே இது?
பொன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்றா. இந்தக் கழிசடையை நீ காதலிக்கறியா?
துரை: நான்சென்ஸ்!
பொன்: அப்படிச் சொன்னா, இந்தப் படிப்பறிவில்லாத கழுதைக்குப் புரியாது. தமிழ்ல சொல்லு. நீதான் அவளை எங்கிட்ட அனுப்பி, அவளை ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி கேக்கச் சொன்னியா?
துரை (செவ்வாயைப் பார்த்து): செவ்வா! என்ன ஒளறர நீ? நான் படிக்கிற படிப்பு என்ன? எங்க அந்தஸ்து என்ன? ஒன் நெலைமை என்ன? இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தியா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
செவ்: (திடுக்கிட்டு): சின்னையா!
துரை: ஆங், அப்படிச் சொல்லு. ஒனக்கும் எனக்கும் இருக்கற உறவு இதுதான். நான் சின்னையா, நீ வேலைக்காரி. உன் தகுதிக்கு மேல ஆசைப்படாதே! அப்படியே உனக்கு என் மேல ஏதாவது ஆசை ஏற்பட்டிருந்தாலும், நீ அதை எங்கிட்ட சொல்லி இருந்தா, நானை ஒனக்கு புத்தி சொல்லி அனுப்பி இருப்பேன். அதை விட்டுட்டு், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, என் அண்ணன்கிட்ட வந்தா கேக்கறது?
பொன்: சபாஷ்டா தம்பி! எங்கே என் தம்பி தவறிப் போயிருப்பானோன்னு நான் கூட ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டுட்டேன். உன் உடம்பில ஓடறதும் என்னோட ரத்தம்தாங்கறதை நிரூபிச்சுட்ட. இப்ப என்னடி சொல்ற, பித்தலாட்டக்காரி!
செவ்: ஐயா! உங்க ரெண்டு பேர் உடம்பிலேயும் ஓடறது ஒரே ரத்தம்னு சொன்னீங்களே, அந்த ரத்தம் வேற யாருக்கும் போயிடாம பாத்துக்கங்க. ஏன்னா, எங்க ஒடம்புல எல்லாம் ஓடற ரத்தம் மனுஷ ரத்தம்! நான் வரேங்க. இல்ல போறேங்க!
(செவ்வாய் போகிறாள். அந்தப் பழைய கனவுத் தோற்றம் மீண்டும் அவள் மனதில் வந்து போகிறது. 'அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே' பாடலின் பின்னணியில், பேண்ட், சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்த அந்தத் தெளிவான முகமற்ற உருவம் அவளை அணைக்கிறது. அவளும் அணைக்கிறாள். அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.)
குரல்: அங்கே கையை விட்டுப் பிரயோசனம் இல்ல, செவ்வா! பாம்பு புத்தில இல்ல.
(செவ்வாய் கையை இழுத்துக் கொண்டு திருக்கிட்டுத் திரும்புகிறாள். அங்கே பூசாரி நிற்கிறார்.)
பூசாரி: அதோ பாரு. கையைக் காட்டுகிறார். செவ்வாய் திரும்பிப் பார்க்க, புற்றிலிருந்து சற்றுத் தள்ளி பாம்பு படமெடுத்து நிற்பதைக் கண்டு, சற்றே திடுக்கிட்டுப் பின் வாங்குகிறாள்.)
பூசாரி: பாத்தியா? பாம்பு இப்பதான் புத்துக்கு வருது. ஏம்மா, ஒரு நாள் தவறாம நீ ஊத்தற பாலைக் குடிக்கற அந்தப் பாம்பு ஒன்னைக் கடிச்சுடுமா? அவ்வளவு மோசமா நன்றி கெட்டு நடந்துக்கறதுக்கு, அது என்ன மனுஷ ஜாதியா? இல்ல, நீ கும்பிடற இந்த அம்மன்தான் ஒன்னை அப்படிச் சாக விட்டுடுவாளா?
(செவ்வாய் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.)
பூசாரி: என்னம்மா, செவ்வா? என்ன ஆச்சு ஒனக்கு? சாகணுங்கற நெனப்பு வர அளவுக்கு அப்படி என்ன நடந்துடுச்சு?
(செவ்வாய் பதில் சொல்லாமல் அழுகிறாள்.)
பூசாரி: இங்க பாரும்மா! ஒன் கஷ்டடத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதைப் பத்தி நாலு பேர்கிட்ட வம்பு பேசறதுக்காக நான் கேக்கல. என்னால முடிஞ்சா, ஏதாவது உதவி செய்யறேன். என்னால எதுவும் செய்ய முடியாதுன்னா, தெனம் அம்மனுக்குப் பூசை செய்யறப்ப, 'தாயே! அந்தப் பொண்ணோட கஷ்டத்தைத் தீர்க்க் கூடாதா?'ன்னு கேட்டு ஞாபகப்படுத்திக்கிட்டாவது இருப்பேன். என்னால வேற என்ன செய்ய முடியும்?
செவ்: வேண்டாங்க... என்னை எதுவும் கேக்காதீங்க.
பூசாரி: சரிம்மா. கேக்கல. வா. ஒன்னை வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வரேன்...மறுபடி இது மாதிரி பைத்தியக்காரத்தனம் எதுவும் செய்யக் கூடாது. அம்மன் மேல ஆணையாச் சொல்றேன். வா. போகலாம்.
(செவ்வாய் பூசாரியுடன் போகிறாள்.)

















.png)

.png)





No comments:
Post a Comment