Wednesday, April 29, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 13

 உறவுகள் தொடர்கதை

திரைக்கதை 

காட்சி 13


(ஆற்றிலிருந்து தண்ணீர்க் குடத்துடன் செவ்வாய் நடந்து வருகிறாள். தலை குனிந்து வரும் அவள், எதிரே விழுந்த நிழலைப் பார்த்துத் தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். எதிரே துரை நிற்கிறான்.)

துரை: என்ன செவ்வா, வெளைஞ்ச பயிர் மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நடந்து வர. எதிரில யாராவது வந்திருந்தா, அவங்க மேல மோதிக்கிட்டிருப்ப போலருக்கே!

செவ் (பெருமூச்சு விடுகிறாள்): ...என்ன சொன்னீங்க?... வெளைஞ்ச பயிர்தான் வளையணும். ஆனா, பச்சைப் பயிர்ல கல்லைக் கட்டித் தொங்க விட்டா, அது கூடத் தொங்கிப் போயிடும்யா!

துரை: செவ்வா! என்ன இது? ஒரு மாதிரி பேசறியே!ஏதாவது வருத்தத்தில இருக்கியா என்ன? இப்ப என்ன நடந்து போச்சு?

செவ்: என்ன சின்னையா, இப்படிக் கேக்கறீங்க!...இன்னும் என்ன நடக்கணும்?...இப்படி நடந்திருக்கலாமா? நான் எப்படி இது மாதிரி நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியலியே! இப்ப, என்னால வெளியவே வர முடியல. அவ்வளவு அவமானமா இருக்கு.

துரை: செவ்வா! நடந்ததுக்காக நானும் ரொம்ப வருத்தப்படறேன். நானும் அதை எதிர்பாக்கல. ஏதோ ஒரு வேகத்தில நடந்து போச்சு. ஆனா, நீ நெனச்சு நெனச்சு கொமைஞ்சு போற அளவுக்கு நெலைமை இல்ல. .. நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். கல்யாணத்துக்கு முன்னாலேயே கர்ப்பமாயிடுவியோன்னு பயப்படற போலருக்கு. அப்படியெல்லாம் நடக்காது. நான் ரொம்ப முன்னெச்சரிக்கையாத்தான் இருந்திருக்கேன். 

செவ்: ஏன்யா, கர்ப்பமா ஆகலேன்னா, அதனால தப்பே பண்ணலன்னு ஆயிடுமா? மத்தவங்களுக்கு வேணும்னா, நடந்தது தெரியாம இருக்கலாம். ஆனா, என் வரையிலும் நான் கெட்டுப் போனது போனதுதானே? நீங்க முன்னெச்சரிக்கையா இருந்த மாதிரி, நான் இல்லாம போயிட்டேனே!

துரை: நான்தான் சொல்றேனே, நான் செஞ்சது தப்புதான்னு. அப்புறம் ஏன்...சரி, நடந்தது நடந்து போச்சு. அதை மறந்துட்டு ஒன் வேலையைப் பாரு. அதையே நெனச்சுக்கிட்டிருக்காதே. நீ எப்பவும் அதையே நெனச்சுக்கிட்டு, எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தா, அதை வச்சே இந்த ஊர்க்காரங்க வம்பு பேச ஆரம்பிச்சுடுவாங்க. 

செவ்: அது இருக்கட்டும், சின்னையா... நம்ம கல்யாண விஷயமா என்ன ஏற்பாடு பண்ணப் போறீங்க? பெரிய ஐயாகிட்டப் பேசினீங்களா?

துரை: பேசறேன், செவ்வா. அவரசப்படாதே! அண்ணன் இந்த அந்தஸ்து வித்தியாசம் எல்லாம் பாப்பாரு. மிராசுப் பையன் இன்னொரு மிராசுதார் வீட்டுப் பொண்ணைத்தான் கட்டிக்கணும்னு நெனப்பாரு. அதனால, அவர்கிட்ட போய் சட்னு இந்த விஷயத்தைப் பேசிட முடியாது. சந்தர்ப்பம் பாத்துத்தான் பேசணும். நேரம் வரட்டும். 

செவ்: நேரம் எப்பங்க வரது? ஒங்களுக்கு பயமா இருந்தா, பெரிய ஐயாகிட்ட நானே பேசறேன்.

துரை: நீ பேசப் போறியா? இதைப் பத்தியா? எப்படிப் பேசுவ?

செவ்: ஏன், நேரடியாக் கேக்கறேன்...இது மாதிரி ஒங்க தம்பி என்னைக் கட்டிக்க ஆசைப்படறாரு. எங்க கல்யாணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும்னு கேக்கறேன்.

துரை: கேட்டா, உடனே அண்ணன் சரின்னு சொல்லிடுவாரா?

துரை: ஒங்களைக் கூப்பிட்டுக் கேப்பாரு, இல்ல? அப்ப, நீங்க சொல்லலாமே!

செவ்: நீ ரொம்ப புத்திசாலி மட்டும் இல்ல, தைரியசாலியும் கூட. நீ சொல்றபடியே செய்யலாம். ஒங்கிட்ட என் அண்ணனுக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. அதனால, நீ கேட்டா, உடனே சரின்னு சொல்லிடுவாரு. 

செவ்: அப்ப, இன்னிக்கே கேட்டுடறேன்யா...ம்...நான் கேக்கறதா, எங்கப்பாவை விட்டுக் கேக்கச் சொல்றதா?

துரை: நீயே கேளு, செவ்வா. அப்புறம், அண்ணனே ஒங்கப்பாவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லுவாரு. 

செவ்: சரிங்க, சின்னையா! ஆனா, ஒங்க அண்ணன் ஒங்களைக் கேக்கறப்ப, நீங்க பயந்து நடுங்காம, ஒங்க மனசில இருக்கறதை ஒங்க அண்ணன்கிட்ட சொல்லணும். சொல்லுவீங்க, இல்ல? (குறும்பாகச் சிரிக்கிறாள்.)

துரை: சொல்லுவேன். ஆனா, அதுக்கு அச்சாரமா நீ ஒண்ணு தரணும். 

செவ் (தலை குனிந்து): அதான் என்னையே ஒங்களுக்குக் கொடுத்துட்டேனே!

துரை: அப்படின்னா, நீ என்னோட சொத்து. ஒன்னை நான் என்ன வேணும்னா செய்யலாம், இல்ல? (அவளை நெருங்கி அணைக்கிறான்.)

செவ்: விடுங்க. யாராவது பாத்துடப் போறாங்க. (கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஓடுகிறாள்.)

கனவுப் பாடல்

பெண்: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு 
                கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
                காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
                 பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

ஆண்: வானம் அங்கே அழுததுமே
               பூமியில் இங்கே சந்தோஷம்
               வானம் அழுத கண்ணீரால்
               பூமிக்கு இங்கே அபிஷேகம்
               ஒத்தரோட அழுகையால 
               இன்னொருத்தர் சந்தோஷம்
               ரெண்டு பேர் சேர்ந்து சிரிச்சா
                இயற்கைக்கே சந்தேகம்
                  
                வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு 

                கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
                காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
                 பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

பெண்: சூரியனும் பூமியும்
                 ஒண்ணாத்தான் சிரிக்கறாங்க
                 அவங்களைப் பிரிக்க
                 யார்தான் இங்கே இருக்காங்க?
                 நல்லவங்க எப்பவுமே
                 சேர்ந்துதானே சிரிப்பாங்க?
                 ஒத்தருக்குத் துன்பம் வந்தா
                 ஒண்ணா சேர்ந்து தடுப்பாங்க

                வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு 
                கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
                காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
                 பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.

ஆண்:    வானத்துக்கும் பூமிக்கும்
                 பாலம் போடும் மழைத்தண்ணி
                 பாதி தூரம் நடக்கும்போதே
                 பாலம் அறுந்து தொங்கிடும். 

பெண்:   நிரந்தரமாய்ப் பாலம் போடும் 
                 சூரியனின் ஒளித்தடம்
                 பனித்துளியும் அதில நடந்து
                 புருஷன் வீடு போயிடும்.                 

இருவரும்: வானம் நல்லாப் பொழிஞ்சுடுச்சு 
                       கழனி நல்லா வெளைஞ்சுடுச்சு
                       காஞ்ச தரை நனைஞ்சுடுச்சு - அங்கே
                       பசும்புல் நல்லா முளைச்சுடுச்சு.


பாடலின் இசை வடிவம் 2

இசை: musicful.ai 

காட்சி 14










No comments:

Post a Comment

உறவுகள் தொடர்கதை - காட்சி 16

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 16 (இரவு நேரம். செவ்வாயின் வீடு. அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வீரய்யனைப் பார்த்தபடியே செவ்வாய் வெளி...