உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 7
மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம்.
முன்பு சிலர் சீட்டாடிய அதே தெருவில் ஒரு வீட்டுத் திண்ணை.
மாடசாமி, இன்னும் சில இளைஞர்கள் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள்.
மாட: நேத்து மாநாட்டுக்கு நீங்க எல்லாருமே வந்திருக்கணும். ஒங்களுக்கு தைரியம் இல்லை. நம்ம ஊர்லேந்து நான் மட்டும் போய் நின்னது எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா? தலைவர் எங்கிட்ட கேக்கறாரு, 'என்ன மாடசாமி, ஒங்க ஊர்ல பாட்டாளிகளே இல்லையா?'ன்னு.
முத்து: மாநாட்டுக்கு எல்லாரும் வரணும்னு நீ சுலபமா சொல்லிட்ட. நீ வேலைக்கு வராததுக்கே பெரிய மிராசு என்ன பேச்சுப் பேசினாரு தெரியுமா? இன்னும் நாங்கள்ளாமும் வயல் வேலைக்கு வராம, மாநாட்டுக்குப் போயிருந்தா என்ன ஆகி இருக்குமோ! உனக்குக் கூட ரெண்டு மூணு நாள் வேலை கொடுக்காம, ஒன்னைப் பட்டினி போடப் போறாராம் மிராசு.
மாட: உழைக்கிற வர்க்கத்தைப் பட்டினி போட்டே கொல்லணும்னு எப்பவுமே நெனச்சுக்கிட்டிருக்கிற இவனை மாதிரி நிலப்பிரபுக்கள் இருக்கற வரையிலும், நம்ம நாட்டில ஏழைகள் எப்படி முன்னேற முடியும்?
மருதை: விடண்ணே! ஊர்ல இவர் ஒத்தர்தான் நெலம் வச்சிருக்காரா என்ன? இவர் வேலை கொடுக்கலேன்னா, வேற யாராவது கொடுத்துட்டுப் போறாங்க.
மாட: நான் அப்படி ஒதுங்கிப் போக மாட்டேன். எனக்கு வேற யாராவது வேலை கொடுப்பாங்களாங்கறது பிரச்னை இல்லை. நான் அவனோட வயல்ல தொடர்ந்து வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். அதனால எனக்கு வேலை கொடுக்க வேண்டியது அவனோட கடமை. இத்தனை நாளா அவனோட வயல்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்கு வேலை கொடுக்க முடியாதுன்னு அவனால எப்படிச் சொல்ல முடியும்? நம்ம ஊர் பஞ்சாயத்து ஆஃபீசில வேலை செய்யறவங்க, பள்ளிக்கூட வாத்தியார்கள் இவங்கள்ளாம் லீவு எடுக்கறதைப் பாக்கறீங்க, இல்ல? அதே மாதிரி லீவு எடுக்க நமக்கும் உரிமை உண்டு. தொழிற்சாலையில வேலை செய்யற தொழிலாளிகளுக்கு லீவு, போனஸ், பிராவிடன்ட் ஃபண்ட் இன்னும் பல வசதிகள் உண்டு. நமக்கு என்ன இருக்கு? நாமளும் தொழிலாளிகள்தானே? அவங்களாவது கட்டடத்துக்குள்ள வேலை செய்யறாங்க. நாம வெய்யில கெடந்து வாடறோம். அவனுக்காச்சு, எனக்காச்சு. பாத்துடறேன்!
கண்ணன்: அவர் ஒனக்கு வேலை கொடுக்காட்டா என்ன செய்வ, மாடசாமி?
மாட: அவன் குடலை உருவிடுவேன். சும்மா ஒப்புக்குச் சொல்ற வார்த்தை இல்லை இது. நீங்கள்ளாம் நரசிம்ம அவதாரம்னு கதை சொல்றீங்களே, அந்த நரசிம்மர் மாதிரி, வரப்பில ஒக்காந்துக்கிட்டு, அவனை என் மடியில போட்டுக்கிட்டு, என் பல்லாலேயே கடிச்சுக் கொதறிப்புடுவேன், கொதறி!
முத்து: மாடசாமி! நீ ரொம்ப ஆவேசமாயிட்டப்பா!
மாட: பின்ன என்னங்கடா? ஒங்களுக்கு முதுகெலும்பு இல்லை. யாராவது ஒத்தன் துணிஞ்சு ஏதாவது செஞ்சாதான், மத்தவங்களுக்கு விடிவு பொறக்கும்.
ராமு: நாங்கதான் ஒன்னைத் தலைவரா ஏத்துக்கிட்டமே!
மாட: தலைவர்! யாருக்குடா வேணும் இந்தத் தலைவர் வேஷமெல்லாம்? நீங்கள்ளாம் நான் சொல்றபடி நடக்கறதா இருந்தா, நம்ம பிள்ளைகளுக்காவது விடிவு காலம் பொறக்கும். இல்லாட்டா, நாம பரம்பரையா அடிமையா வாழ வேண்டியதுதான்.
கண்ணன்: அதான் அரசாங்கத்தில சட்டமெல்லாம் போடறாங்களே! நாம எதுக்கு அவசரப்படணும்?
மாட: அரசாங்கத்தில ஒவ்வொண்ணுக்கா சட்டம் போட்டு, அதை அமல் படுத்தறதுங்கறது ரொம்ப கஷ்டம். அதுக்கு ரொம்ப காலம் ஆகும். ஏதாவது ஒரு சட்டம் போட்டா, யாராவது ஒத்தன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவான். அப்புறம் அந்த வழக்கு முடியறவரையிலும் காத்திருக்கணும். அதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. நம்ம உரிமைகளை நாம போராடித்தான் பெறணும்.
மருதை: இப்ப நாம என்ன செய்யணுங்கற?
மாட: மொதல்ல ஒரு சங்கம் ஆரம்பிக்கணும். இங்கே இருக்கறவங்க மொதல்ல சங்கத்தில உறுப்பினரா சேருங்க. ஒங்களைப் பாத்து மத்தவங்களும் கொஞ்சம் கொஞ்சமா சேருவாங்க. என்ன சொல்றீங்க?
(யாரும் பதில் பேசவில்லை.)
மாட: தெரியுமே எனக்கு! ஒங்களுக்கெல்லாம் முதுகெலும்பே கெடையாது.
முத்து: நான் ரெடி, மாடசாமி!
மாட: மத்தவங்க?
மருதை: நான் யோசிச்சுச் சொல்றேன்.
ராமு: எங்கப்பாரைக் கேக்கணும்.
கண்ணன்: அதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்பபா. இப்போதைக்கு சங்கம்னு எதுவும் வேண்டாம்.
(ஒவ்வொருவராக எழுந்து செல்ல, மாடசாமியும், முத்துவும் மட்டுமே அங்கே இருக்கிறார்கள்.)






