உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 5
பெரும்பாலும் எளிமையான வீடுகள் நிறைந்திருக்கும் ஒரு தெருவில், ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து, சிலர் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, அங்கே மாடசாமி வருகிறான்.)
மாட: ஏன்யா இப்படி சீட்டாடிக் காசைத் தொலைக்கிறீங்க? அரை வயத்துக் கஞ்சிக்கு வழியில்ல. இதில, சீட்டாட்டம், குடி வகையறான்னு ஒண்ணு கூடக் கொறையக் கூடாது,
நம்மளுக்கு!
ஒருவன்: அடப் போப்பா! நாள் பூரா வயல்ல சேத்துல நின்னுட்டு வரோம். கொஞ்ச நேரம் விளையாடினா என்ன குறைஞ்சுடும்?
மாட: ஆமாம்யா! ஏதாவது இருந்தாத்தானே குறையறதுக்கு? எல்லாத்தையும் மிராசுங்க பிடுங்கிக்கிட்டு, வெறும் சக்கையைத்தானே நம்மகிட்ட வீசி எறியறாங்க? நாமளும் அதை மென்னுக்கிட்டு, சீட்டாடிப் பொளுதைத் தள்ளிக்கிட்டிருக்கோம்!
மற்றொருவன்: இப்ப நாங்க என்ன செய்யணுங்கற நீ?
மாட: மொதல்ல, சீட்டைக் கலைச்சுப் போட்டுட்டு வாங்க. அப்புறம் சொல்றேன்.
முதலாமவன்: இருப்பா. ஆட்டம் பாதியில நிக்குது. முடிச்சுட்டு வரோம்.
மாட: அட, சரிதான் போய்யா! நிறுத்துவீங்களா! மகாபாரத யுத்தம் பாரு! முடிச்சுட்டுத்தான் வருவாங்களாம். ஆமாம், ஆட்டத்தில தோக்கறவங்க ஜெயிக்கறவங்களுக்குக் கொடுக்கக் காசு வச்சிருக்கீங்களா?
இரண்டாமவன்: அதைப் பத்தி ஒனக்கென்ன? நீயா ஜெயிக்கப் போற? ஜெயிச்சவனே, கடன் சொன்னா ஒத்துக்கப் போறான். ஒனக்கு எதுக்கு இந்தக் கவலை?
மாட: ஒங்களையெல்லாம் திருத்தவே முடியாதுய்யா! (போகிறான்)
முதலாமவன்: அட போய்யா! மகாத்மா காந்தி போறாரு பாரு!
இன்னொருவன்: யோவ்! அவன் காதுல விழுந்தா அடிக்க வந்துடுவான்யா. அந்த ஆளுக்கு காந்தியைக் கண்டா புடிக்காது. வேற யாரோ மாசே துங்காமே, அவரு கட்சி அவன்.
மற்றொருவன்: அப்ப, அவன் காந்திக் கட்சி இல்லையா?
இன்னொருவன்: யோவ்! காந்திக் கட்சின்னு ஒண்ணு கிடையவே கிடையாதுய்யா! ஏன்யா, பேப்பர் கீப்பர் படிக்க் கூடாது?
முதலாமவன்: ஏன், கடையில பொருட்கள் வாங்கறப்ப, பொட்டலம் கட்டிக் கொடுக்கறாங்களே, அந்தப் பேப்பரையெல்லாம் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்?
இரண்டாமவன்: அப்படியா? எலக்ஷன்ல யாருக்கு ஓட்டுப் போடப் போற?
முதலாமவன்: யாருக்காவது.
இரண்டாமவன்: யாருக்காவதுன்னா? யார் நிக்கறாங்கன்னாவது தெரியுமா ஒனக்கு?
முதலாமவன்: அதெல்லாம் எனக்கு எதுக்குத் தெரியணும்? நம்ம பெரிய மிராசு யாருக்கு ஓட்டுப் போடச் சொல்றாரோ, அவங்களுக்குப் போடப் போறேன். அவரு குருவியில குத்தச் சொன்னா, குருவியில குத்துவேன். யானையில குத்துடான்னு சொன்னார்னா, யானையில குத்துவேன்.
இன்னொருவன்: ஒன் பொண்டாட்டியைக் குத்துன்னு சொன்னா?
முதலாமவன்: ஒன் மூஞ்சியில குத்துவேன். என்னய்யா, கிண்டலா பண்ற?
(காட்சியின் தொடர்ச்சியில், மாடசாமி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். தரையிலிருந்து ஒரு சிறு கல்லைப் பொறுக்குவதும், அதைத் தரையில் ஓங்கி அடிப்பதுமாக இருக்கிறான்.
சற்றுத் தொலைவில் பேச்சுக் குரல் கேட்பதை கவனித்து, அங்கே பார்க்கிறான். செவ்வாயும், ருக்குவும் குடத்துடன் நடந்து வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும். அவன் முகம் மலர்கிறது.
செவ்: போடி, ஒனக்கு எப்பவும் சினிமாவைப் பத்தித்தான் பேச்சு. எப்படித்தான் உனக்கு நடிக்கறவங்க எல்லார் மூஞ்சியும், பேரும் ஞாபகம் இருக்கோ! எனக்குப் பேரும் மறந்துடுது, மூஞ்சியும் மறந்துடுது.
ருக்கு: உனக்கு ஆம்பிளை நடிகர்களை மட்டும் நல்லா ஞாபகம் இருக்குமே!
செவ்: போடி! ஏதாவது பேசிக்கிட்டு....அட, நம்ம மாடசாமி அண்ணன் வராரே!
ருக்கு: உக்கும். அண்ணன் என்னடி அண்ணன்? அது உன் கூடப் பொறந்ததுதா?
செவ்: கூடப் பொறந்தாத்தானா? நீயும் நானும் மட்டும் கூடப் பொறந்தோமா?
ருக்கு: இல்லையே! அதனாலதான், நாம அக்கா தங்கச்சின்னு கூப்பிட்டுக்கறதில்ல.
செவ்: சம்பந்தம் இல்லாம ஏதோ சொல்ற! (மாடசாமியைப் பார்த்து) என்னண்ணே! எங்கே இந்தப் பக்கம்?
மாட (முகம் சுளித்து): என்ன செவ்வா இது, அண்ணன் தம்பின்னெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு?
செவ்: பின்னே எப்படிக் கூப்பிடறதாம்?
மாட: வயசில பெரியவங்களா இருந்தாத்தான் மரியாதை எல்லாம் கொடுத்துப் பேசணும். சம வயசுக்காரங்களைப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டாதான் பொருத்தமா இருக்கும். நம்ம கிராமத்தில எல்லாரையும் அடிமை மாதிரிதானே பழக்கி வச்சிருக்காங்க? அதனாலதான், அண்ணே, ஆண்டை, ஐயா, எசமான்லாம் பேசறது நமக்குப் பழக்கமாயிடுச்சு.
செவ்: ஒன்னை மாடசாமின்னு பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்ற?
ருக்கு: இல்லேடி செவ்வா. பேரைச் சுருக்கி மாடுன்னு கூப்பிடு! (குறும்பாகச் சிரிக்கிறாள்.)
மாட (கையை ஓங்கி): அடிச்சேன்னா, முன்னே நீட்டிக்கிட்டு இருக்கற பல்லு ரெண்டும் உள்ள போயிடும்.
(ருக்கு வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு, மாடசாமிக்கு அழகு காட்டுகிறாள்.)
செவ்: என்னையா நீ? அவளை இப்படிச் சொல்லலாமா? கடவுளோட படைப்பில, ஒவ்வொத்தர் மூஞ்சியும், உடம்போட அமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதைக் கேலி செய்யறது தப்பு இல்ல?
மாட: ஆமாம். கடவுளோட படைப்பு. மண்ணாங்கட்டி! இப்படித்தான், வாய்க்குள்ள இருக்கற பல்லு மேடு பள்ளமா இருந்தாலும் சரி, வாழற மனுஷங்களுக்குள்ள மேடு பள்ளம் இருந்தாலும் சரி, எல்லாத்தையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லிட்டுப் பேசாம கெடப்பாங்க நம்ம ஆளுங்க! நம்ம கிராமம் எப்பத்தான் உருப்படப் போகுதோ!
ருக்கு: நீ மொதல்ல ஊரை விட்டுப் போய்யா! கிராமம் உருப்பட்டுடும்.
மாட: அப்படிப் போறதா இருந்தா, ஒங்க எல்லாரையும் இழுத்துக்கிட்டுத்தான் போகப் போறேன்.
ருக்கு (குறும்பாகச் சிரித்து): எல்லாரையும் எதுக்குய்யா? யாராவது ஒத்தியை இழுத்துக்கிட்டுப் போனா போதாதா?
மாட: பாத்தியா செவ்வா, எப்படிப் பேசறான்னு? நீ இவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு வர! நீ மட்டும் இல்லேன்னா,நெசமாலுமே அவ பல்லைத் தட்டி, உள்ள தள்ளி வுட்டிருப்பேன். வாயாடிக் களுதை!
ருக்கு: யோவ்! களுதைன்னெல்லாம் பேசினா, தெரியும்!
செவ்: சரி, சரி.விடுடி. அந்த ஆள்தான் கோவக்காரர்னு ஒனக்குத் தெரியும், இல்ல?ஏன் அவர்கிட்ட போயி மறுபடி மறுபடி வாயைக் கொடுக்கற? (மாடசாமியிடம்) நாங்க வரோம், அண்ணே!
மாட: இங்க பாரு, செவ்வா! இந்த மாதிரி அண்ணன்லாம் கூப்பிடறது எனக்குப் புடிக்கல. மறுபடி சொல்லிட்டேன்.
செவ்: யோவ்! ஒன் பேரைச் சொல்லி எல்லாம் என்னால கூப்பிட முடியாது...அதை விடு. எங்கேயோ போய்க்கிட்டிருந்த போலருக்கு. வழியில எங்களைப் பாத்துப் பேசினதில, ஒன் வேலை கெட்டிருக்கப் போகுது.
மாட: அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நம்ம ஊர் சனங்களுக்கு சொரணைங்கறது கொஞ்சம் கூடக் கிடையாது. இவங்களை வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டு வந்தேன். .நீங்க எதுத்தாப்பல வந்தீங்க. ஒங்ககிட்டரெண்டு வார்த்தை பேசினேன். இடையில, இந்த வாயாடிப் பொண்ணு என்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பாக்குது!
ருக்கு: நம்ம ஊர்க்காரங்கள்ளாம் என்ன செய்யணும்னு சொல்ற நீ?
மாட (எகத்தாளமாக): ம்..? நாள் முழுக்க வெய்யில்ல நின்னு ஒழைச்சுட்டு, மிராசுப் பசங்க போடற பிச்சைக் காசை வாங்கிக்கிட்டு, அரை வயத்துக்குக் கஞ்சி குடிச்சுட்டு, மூணு சீட்டிலேயும், முனியன் கடைக் கள்ளச் சரக்கிலேயும் காசைத் தொலைச்சுட்டு, ராத்திரி வீட்டுக்கு வந்து, பட்டினியாக் கெடக்கற பொண்டாட்டியை நாலு சாத்து சாத்திட்டு, ஒன்னை மாதிரி குதிர்களைப் பெத்துப் போட்டுத் தெருவில நிறுத்திட்டு, குஷாலா சுடுகாட்டில தூங்கச் சொல்றேன்.போவியா?
(கோபமாகப் போகிறான்.)
ருக்கு: இந்த ஊருக்கு இப்படி ஒரு ஜன்மம் எங்கேயிருந்துதான் வந்ததோ!
(இருவரும் நடந்து செல்கிறார்கள்.)
No comments:
Post a Comment