Saturday, March 28, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 4

 உறவுகள் தொடர்கதை
திரைக்கதை 

காட்சி 4


(பொன்னம்பலத்தின் வீட்டு முற்றத்தில் அமர்ந்து செவ்வாய் தேங்காய் காய வைத்துக் கொண்டிருக்கிறாள். நிழலாடியதும், வழி விட்டுச் சற்றுத் தள்ளி அமர்கிறாள். நிழல் அவளை நெருங்கி வந்து, அவள் மேல் விழுகிறது. செவ்வாய் தலை நிமிர்ந்து பார்க்கிறாள். வேட்டியும், சட்டையும் அணிந்து நிற்கும் இளைஞனைப் பார்த்துத் திகைக்கிறாள்.)

செவ் (உள்ளே திரும்பி): ஐயா! யாரோ வந்திருக்காங்க!

(ஏதோ ஒரு உள்ளுணர்வில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரிந்தவளாக, விழிகளை விரித்துப் பார்க்கிறாள்.) 

செவ்: சின்னையா! நீங்களா? அடேங்கப்பா! எம்புட்டு தூரம் மாறிப் போயிட்டீங்க! அடையாளமே தெரியலையே!... ஆமாம், நீங்க ரயில்ல வல்லேன்னு அப்பா போய்ப் பாத்துட்டு வந்து சொன்னாங்களே!

துரை: உன் அப்பா சொன்னது சரிதான், செவ்வா! நான் ரயில்ல வல்ல.

செவ்: பின்ன?

துரை: பிளேன்ல வந்தேன். 

செவ்: ஏரோப்ளேன்லயா? நம்ம ஊர்ல ஏதுங்க... ஆமாம், எங்க எறக்கினாங்க?

துரை: நம்ம அரச வாய்க்கா மதகு இல்ல, அது மேலதான் எறக்கினாங்க.

செவ்: போங்கையா! நான் அறியாத பொண்ணு, படிக்காதவ, பட்டிக்காடுங்கறதால, நீங்க என்னைக் கேலி பண்றீங்க.

துரை: சேச்சே!

செவ்: பின்ன? பிளேன்ல வந்தேன்னு சொன்னது பொய்தானே?

துரை: ஆமாம். 

செவ்: பின்னே எப்படி வந்தீங்களாம்?

துரை: மயில்ல வந்தேன். 

செவ்: ஐய்யய்ய! நீங்க என்ன முருக சாமியா? எங்கே, இப்படித் திரும்புங்க. ஆறு தலை இருக்கான்னு பாக்கலாம்!

துரை: இருந்தது. ஆனா, ஆறு முகத்திலேயும் சளி புடிச்சதால, தொல்லை பொறுக்க முடியாம, அஞ்சு தலையை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டேன். 

செவ்: பட்டணத்துக்குப் போயி, நல்லாப் பேசக் கத்துக்கிட்டு வந்திருக்கீங்க. அது சரி. எப்படி வந்தீங்கன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே!

துரை: அதான் சொன்னேனே, மயில்லன்னு!

செவ்: போங்க, சின்னையா! இனிமே உங்களோட நான் பேசப் போறதில்ல. என்னை ஒரு படிக்காத பட்டிக்காடுன்னு நெனச்சுத்தானே, நீங்க இப்படி ஏமாத்தறீங்க?

துரை: இல்ல, செவ்வா! நெசமாவே நான் மயில்லதான் வந்தேன், அதாவது மெயில்ல. விடிகாலையில ரெண்டு மணிக்கு நம்ம ஸ்டேஷன்ல நிக்காமப் போகுமே, அந்த மெயில்ல! பக்கத்து ஜங்ஷன்ல எறங்கி, அங்கேந்து பஸ்ஸைப் புடிச்சு வந்தேன். நான் வழக்கமா வர பாசஞ்சர் வண்டியிலதான் வருவேன்னு நெனச்சு, அண்ணன் உங்கப்பாவை வண்டியோட ஸ்டேஷனுக்கு அனுப்பி, அவரும் பாவம், போய்ப் பாத்துட்டு வந்து, நான் வல்லேன்னு சொல்லிட்டாரு.  

செவ்: எப்படியோ நல்லபடியா வந்தூ சேந்தீங்களே! நீங்க வல்லேன்னதும், பெரிய ஐயா ரொம்பப் பதறிப் போயிட்டாங்களாம். அப்பாதான் சொன்னாரு.

(பொன்னம்பலம் உள்ளிருந்து வருகிறார்.)

பொன்: செவ்வா! மொதல்ல, வூட்டுக்குப் போய், தம்பி வந்துட்டாருங்கறதை ஒங்கப்பன்கிட்ட சொல்லு. பாவம், ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருப்பான். 

செவ்: ஆமாங்கையா! சோறு கூடத் திங்க மாட்டேன்னுட்டாரு. நான்தான் சொல்லித் திங்க வச்சேன். இப்ப வேலைக்குக் கிளம்பிப் போயிருப்பாரு. 

பொன்: சரி. நானும் வயலுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன். நானே அவன்கிட்ட சொல்லிடறேன். (துரையிடம் திரும்பி) டேய், துரை! ராத்திரி பூரா கண் முளிச்சு, ரயில்லேயும், பஸ்லேயும் வந்திருக்க. உள்ள போய், நல்லாத் தூங்கு. மத்ததெல்லாம் சாயந்திரத்துக்கு மேல பேசிக்கலாம். 

(போகிறார்.

பொன்னம்பலம் சென்றதும், துரை ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறான். செவ்வாய் சற்று அதிர்ச்சியுடனும், சற்று ஆர்வத்துடனும் துரை சிகரெட்டை எடுத்துப் பற்ற வைப்பதையும், புகை விடுவதையும் பார்க்கிறாள்.)

செவ்: என்னங்க சின்னையா இது? பொகையெல்லாம் விடறீங்க! புதுசா இருக்கே!

துரை: ஏன், புடிச்சா என்ன? ஒனக்குப் பிடிக்காதா?

செவ்: ஆங், எனக்கென்ன? எங்கப்பா தினமும் பீடியைப் பத்த வச்சு, ஊதி ஊதி,  இருமிக்கிட்டு இருக்கறதைப் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்?

துரை: இது பீடி இல்லை, சிகரெட். ரொம்ப ஒசந்த ஜாதி!

(செவ்வாய் பெரிதாகச் சிரிக்கிறாள்.)

துரை: என்ன செவ்வா, ஏன் இப்படிச் சிரிக்கற?

செவ்: இல்லீங்க. பீடி சிகரெட்ல கூட ஜாதி இருக்கான்னு நெனச்சு சிரிச்சேன்.

துரை: ஆமாம், இருக்கு. ஜாதி இருக்கணும், செவ்வா. அதுல என்ன தப்பு? ஆனா, பொறப்பை வச்சு ஜாதியைச் சொல்லக் கூடாது. மனுஷனோட குணத்தை, அறிவை, நடத்தையை வச்சு, நல்ல மனுஷன், புத்திசாலி, முட்டாள், அயோக்கியன்னெல்லாம் ஜாதி பிரிக்கறதில என்ன தப்பு? இதோ இந்த சிகரெட், பீடி, சுருட்டு எல்லாமே பொறப்பில புகையிலை ஜாதிதான். ஆனா, அந்தஸ்தில வெவ்வேறு ஜாதியா இருக்கு!

செவ்: ஆமாங்கையா! நீங்க சொன்ன மாதிரி, இப்பல்லாம் ஜனங்க ஒத்தர் பொறந்த குலத்தை வச்சு ஜாதி பாக்கறதில்ல. அந்தஸ்தை வச்சுத்தான் பாக்கறாங்க. நீங்களும், நாங்களும் ஒரே ஜாதிதான். ஆனா, நீங்க மிராசுங்க, நாங்க கூலிக்காரங்க. அதனால, வேற ஜாதிக்காரங்க மாதிரிதானே இருக்கோம்!

துரை: ஒண்டர்ஃபுல், செவ்வா! நீ கூட இவ்வளவு அற்புதமாப் பேசறியே! இதில, படிக்காதவன்னு வேற அடிக்கொரு தடவை சொல்லிக்கற!

செவ்: நான் என்னத்தைக் கண்டேன், சின்னையா? எங்க தெருவில மாடசாமின்னு ஒத்தர் இருக்காரு. ஒங்களை மாதிரி பெரிய படிப்பு படிக்காட்டாலும், நாலு எழுத்து படிச்சவரு. அவருதான் அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது சொல்லுவாரு. 

துரை: ஓ! அவரும் உங்க ஜாதிக்காரரா?

செவ்: பாத்தீங்களா? நீங்களும், நாங்களும் ஒரே ஜாதின்னாலும், நான் வேற ஜாதிங்கற மாதிரி நெனச்சுதானே, 'உங்க ஜாதிக்காரரா?'ன்னு கேக்கறீங்க! அவரு நம்ம ஜாதி இல்ல, வேற ஜாதிக்காரர்தான். ஆனா, எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவாரு.  அதை விடுங்க. நீங்க ஊர்லேந்து வந்திருப்பீங்க. ரொம்பக் களைப்பா இருப்பீங்க. பெரிய ஐயா கூட ஒங்களைப் படுத்துத் தூங்கச் சொல்லிட்டுத்தானே போனாரு? நான் ஒரு அறிவு கெட்டவ. சம்பந்தமில்லாம ஏதோ பேசிக்கிட்டு நிக்கறேன். நீங்க போய்த் தூங்குங்க. 

துரை: இல்லை, செவ்வா! எனக்குத் தூக்கம் வல்ல. நீ ஒன் வேலையைப் பாரு.  நான் தூக்கம் வரப்ப தூங்கிக்கறேன். 

செவ்: சரிங்க. நான் என் வீட்டுக்குப் போயிட்டு, அப்புறம் வரேன். நீங்க களைப்புத் தீர நல்லாத் தூங்குங்க.

(செவ்வாய் போகிறாள். அவள் மறையும் வரை, துரை அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.)

காட்சி 5



No comments:

Post a Comment

உறவுகள் தொடர்கதை - காட்சி 7

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 7 பொழுது சாய்ந்து விட்ட நேரம்.  மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம்.  முன்பு சிலர் சீட்டாடிய அதே...