உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 5
உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 5
உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 4
செவ் (உள்ளே திரும்பி): ஐயா! யாரோ வந்திருக்காங்க!
(ஏதோ ஒரு உள்ளுணர்வில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரிந்தவளாக, விழிகளை விரித்துப் பார்க்கிறாள்.)
செவ்: சின்னையா! நீங்களா? அடேங்கப்பா! எம்புட்டு தூரம் மாறிப் போயிட்டீங்க! அடையாளமே தெரியலையே!... ஆமாம், நீங்க ரயில்ல வல்லேன்னு அப்பா போய்ப் பாத்துட்டு வந்து சொன்னாங்களே!
துரை: உன் அப்பா சொன்னது சரிதான், செவ்வா! நான் ரயில்ல வல்ல.
செவ்: பின்ன?
துரை: பிளேன்ல வந்தேன்.
செவ்: ஏரோப்ளேன்லயா? நம்ம ஊர்ல ஏதுங்க... ஆமாம், எங்க எறக்கினாங்க?
துரை: நம்ம அரச வாய்க்கா மதகு இல்ல, அது மேலதான் எறக்கினாங்க.
செவ்: போங்கையா! நான் அறியாத பொண்ணு, படிக்காதவ, பட்டிக்காடுங்கறதால, நீங்க என்னைக் கேலி பண்றீங்க.
துரை: சேச்சே!
செவ்: பின்ன? பிளேன்ல வந்தேன்னு சொன்னது பொய்தானே?
துரை: ஆமாம்.
செவ்: பின்னே எப்படி வந்தீங்களாம்?
துரை: மயில்ல வந்தேன்.
செவ்: ஐய்யய்ய! நீங்க என்ன முருக சாமியா? எங்கே, இப்படித் திரும்புங்க. ஆறு தலை இருக்கான்னு பாக்கலாம்!
துரை: இருந்தது. ஆனா, ஆறு முகத்திலேயும் சளி புடிச்சதால, தொல்லை பொறுக்க முடியாம, அஞ்சு தலையை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டேன்.
செவ்: பட்டணத்துக்குப் போயி, நல்லாப் பேசக் கத்துக்கிட்டு வந்திருக்கீங்க. அது சரி. எப்படி வந்தீங்கன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே!
துரை: அதான் சொன்னேனே, மயில்லன்னு!
செவ்: போங்க, சின்னையா! இனிமே உங்களோட நான் பேசப் போறதில்ல. என்னை ஒரு படிக்காத பட்டிக்காடுன்னு நெனச்சுத்தானே, நீங்க இப்படி ஏமாத்தறீங்க?
துரை: இல்ல, செவ்வா! நெசமாவே நான் மயில்லதான் வந்தேன், அதாவது மெயில்ல. விடிகாலையில ரெண்டு மணிக்கு நம்ம ஸ்டேஷன்ல நிக்காமப் போகுமே, அந்த மெயில்ல! பக்கத்து ஜங்ஷன்ல எறங்கி, அங்கேந்து பஸ்ஸைப் புடிச்சு வந்தேன். நான் வழக்கமா வர பாசஞ்சர் வண்டியிலதான் வருவேன்னு நெனச்சு, அண்ணன் உங்கப்பாவை வண்டியோட ஸ்டேஷனுக்கு அனுப்பி, அவரும் பாவம், போய்ப் பாத்துட்டு வந்து, நான் வல்லேன்னு சொல்லிட்டாரு.
செவ்: எப்படியோ நல்லபடியா வந்தூ சேந்தீங்களே! நீங்க வல்லேன்னதும், பெரிய ஐயா ரொம்பப் பதறிப் போயிட்டாங்களாம். அப்பாதான் சொன்னாரு.
(பொன்னம்பலம் உள்ளிருந்து வருகிறார்.)
பொன்: செவ்வா! மொதல்ல, வூட்டுக்குப் போய், தம்பி வந்துட்டாருங்கறதை ஒங்கப்பன்கிட்ட சொல்லு. பாவம், ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருப்பான்.
செவ்: ஆமாங்கையா! சோறு கூடத் திங்க மாட்டேன்னுட்டாரு. நான்தான் சொல்லித் திங்க வச்சேன். இப்ப வேலைக்குக் கிளம்பிப் போயிருப்பாரு.
பொன்: சரி. நானும் வயலுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன். நானே அவன்கிட்ட சொல்லிடறேன். (துரையிடம் திரும்பி) டேய், துரை! ராத்திரி பூரா கண் முளிச்சு, ரயில்லேயும், பஸ்லேயும் வந்திருக்க. உள்ள போய், நல்லாத் தூங்கு. மத்ததெல்லாம் சாயந்திரத்துக்கு மேல பேசிக்கலாம்.
(போகிறார்.
பொன்னம்பலம் சென்றதும், துரை ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறான். செவ்வாய் சற்று அதிர்ச்சியுடனும், சற்று ஆர்வத்துடனும் துரை சிகரெட்டை எடுத்துப் பற்ற வைப்பதையும், புகை விடுவதையும் பார்க்கிறாள்.)
செவ்: என்னங்க சின்னையா இது? பொகையெல்லாம் விடறீங்க! புதுசா இருக்கே!
துரை: ஏன், புடிச்சா என்ன? ஒனக்குப் பிடிக்காதா?
செவ்: ஆங், எனக்கென்ன? எங்கப்பா தினமும் பீடியைப் பத்த வச்சு, ஊதி ஊதி, இருமிக்கிட்டு இருக்கறதைப் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்?
துரை: இது பீடி இல்லை, சிகரெட். ரொம்ப ஒசந்த ஜாதி!
(செவ்வாய் பெரிதாகச் சிரிக்கிறாள்.)
துரை: என்ன செவ்வா, ஏன் இப்படிச் சிரிக்கற?
செவ்: இல்லீங்க. பீடி சிகரெட்ல கூட ஜாதி இருக்கான்னு நெனச்சு சிரிச்சேன்.
துரை: ஆமாம், இருக்கு. ஜாதி இருக்கணும், செவ்வா. அதுல என்ன தப்பு? ஆனா, பொறப்பை வச்சு ஜாதியைச் சொல்லக் கூடாது. மனுஷனோட குணத்தை, அறிவை, நடத்தையை வச்சு, நல்ல மனுஷன், புத்திசாலி, முட்டாள், அயோக்கியன்னெல்லாம் ஜாதி பிரிக்கறதில என்ன தப்பு? இதோ இந்த சிகரெட், பீடி, சுருட்டு எல்லாமே பொறப்பில புகையிலை ஜாதிதான். ஆனா, அந்தஸ்தில வெவ்வேறு ஜாதியா இருக்கு!
செவ்: ஆமாங்கையா! நீங்க சொன்ன மாதிரி, இப்பல்லாம் ஜனங்க ஒத்தர் பொறந்த குலத்தை வச்சு ஜாதி பாக்கறதில்ல. அந்தஸ்தை வச்சுத்தான் பாக்கறாங்க. நீங்களும், நாங்களும் ஒரே ஜாதிதான். ஆனா, நீங்க மிராசுங்க, நாங்க கூலிக்காரங்க. அதனால, வேற ஜாதிக்காரங்க மாதிரிதானே இருக்கோம்!
துரை: ஒண்டர்ஃபுல், செவ்வா! நீ கூட இவ்வளவு அற்புதமாப் பேசறியே! இதில, படிக்காதவன்னு வேற அடிக்கொரு தடவை சொல்லிக்கற!
செவ்: நான் என்னத்தைக் கண்டேன், சின்னையா? எங்க தெருவில மாடசாமின்னு ஒத்தர் இருக்காரு. ஒங்களை மாதிரி பெரிய படிப்பு படிக்காட்டாலும், நாலு எழுத்து படிச்சவரு. அவருதான் அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது சொல்லுவாரு.
துரை: ஓ! அவரும் உங்க ஜாதிக்காரரா?
செவ்: பாத்தீங்களா? நீங்களும், நாங்களும் ஒரே ஜாதின்னாலும், நான் வேற ஜாதிங்கற மாதிரி நெனச்சுதானே, 'உங்க ஜாதிக்காரரா?'ன்னு கேக்கறீங்க! அவரு நம்ம ஜாதி இல்ல, வேற ஜாதிக்காரர்தான். ஆனா, எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவாரு. அதை விடுங்க. நீங்க ஊர்லேந்து வந்திருப்பீங்க. ரொம்பக் களைப்பா இருப்பீங்க. பெரிய ஐயா கூட ஒங்களைப் படுத்துத் தூங்கச் சொல்லிட்டுத்தானே போனாரு? நான் ஒரு அறிவு கெட்டவ. சம்பந்தமில்லாம ஏதோ பேசிக்கிட்டு நிக்கறேன். நீங்க போய்த் தூங்குங்க.
துரை: இல்லை, செவ்வா! எனக்குத் தூக்கம் வல்ல. நீ ஒன் வேலையைப் பாரு. நான் தூக்கம் வரப்ப தூங்கிக்கறேன்.
செவ்: சரிங்க. நான் என் வீட்டுக்குப் போயிட்டு, அப்புறம் வரேன். நீங்க களைப்புத் தீர நல்லாத் தூங்குங்க.
(செவ்வாய் போகிறாள். அவள் மறையும் வரை, துரை அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.)
உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 3
அதிகாலை நேரம். எங்கோ தூரத்தில் கோழி கூவுகிறது.
செவ்வாயின் உறக்கத்தில் அதே கனவு.
உருவம் புலப்படாத, நாகரீகமான பட்டணத்து இளைஞன் அவளுக்கு மாலையிட்டு அணைத்துக் கொள்ளும் காட்சி.
அவள் கண் விழிக்கிறாள்.
ஒரு நிமிடம் கண்கள் செருகி, கண்ட கனவில் லயிக்கிறாள்.
மறைந்த கனவை மனதுக்குள் நினைவு கூர முயன்று தோற்கிறாள்.
சட்டென்று விழிப்பு வரக் கண்களைக் கசக்கிக் கொண்டு, பக்கத்தில் பார்க்கிறாள்.
அவள் அப்பா இல்லை.
தூரத்தில் எங்கோ ‘தே’ என்று மாட்டை விரட்டும் ஒலி கேட்கிறது.
அவள் கொட்டாவி விட்டு விட்டு, மீண்டும் படுத்துக் கொள்கிறாள்.
நிலை கொள்ளாமல் இப்படியும், அப்படியும் பரண்டு படுத்து விட்டுப் பிறகு எழுந்து நின்று, சோம்பலுடன் கைகளை முரிக்கிறாள்.
அப்படியே சுவரில் சாய்ந்து உட்காருகிறாள்.
கண்கள் சுழலத் தூக்கம் வந்து, தலை ஆடுகிறது.
காட்சியின் தொடர்ச்சியில் அவளை யாரோ எழுப்புகிறார்கள்.)
எழுப்பியவள்: அடியே செவ்வா! என்னாடி, இப்படி ஒக்காந்துக்கிட்டே தூங்கற? பொளுது விடிஞ்சு எம்மாம் நேரம் ஆச்சு தெரியுமா? வாசத் தெளிச்சுக் கோலம் போட வேண்டாமாடி? எளுந்திருடி
(செவ்வாய் கண் விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.)
செவ்: என்ன செல்லக்கா? அதுக்குள்ளாற எளுப்பி விட்டுட்டியே! ஓ...பொளுது விடிஞ்சிடுச்சு போலருக்கே!
(செல்லக்கா என்று அழைக்கப்பட்ட) செல்லி: அது சரி. இப்பதான் புரிஞ்சுதாக்கும்!
செவ்: இப்பதான் எங்கப்பாரு வண்டி ஓட்டிக்கிட்டுப் போன மாதிரி இருக்கு. அதுக்குள்ள இம்மா நேரம் ஆயிடுச்சே!
(கைகளை உதறிக் கொண்டு, புடவையைச் சரி செய்து கொள்கிறாள்.)
செவ்: ஆமாம், மதுரை ரயில்ல வந்து இறங்கி, டேசன்லேந்து நம்ம ஊருக்கு வண்டியில வந்தா, இங்க எப்ப வந்து சேர முடியும்?
செல்லி: எனக்கு என்னாடி தெரியும்? எனக்கென்ன மதுரையில மளிகை மண்டி இருக்கா என்ன, இல்லை நான் அடிக்கடி மதுரைக்குப் போய் வந்துக்கிட்டிருக்கேனா? நீ எதுக்கு இதைக் கேக்கற? ஓ, நம்ம தொரைத்தம்பி வருதே, அதுக்காகக் கேக்கறியா?
செவ்: ஆங்... அவங்க எப்ப வந்தா எனக்கென்னக்கா? எங்க அப்பாரு பாவம், காலையிலேயை குளூர்ல எந்திரிச்சு, டேசனுக்கு வண்டியை ஓட்டிக்கிட்டுப் போயிருக்காரே, எப்ப திரும்பி வருவாரோன்னு நெனைச்சுத்தான் கேக்கறேன்.
செல்லி: எல்லாம் நேரமானா வராங்க. ரயிலு வந்ததுமே, தம்பியை வண்டியில போட்டுக்கிட்டு வர வேண்டியதுதானே?...அடேடே, வண்டிச் சத்தம் கேக்குதே. ஒங்கப்பாவுக்கு நூறு வயசுதான் போ! நீ அவரைப் பத்திக் கேக்க ஆரம்பிச்ச உடனேயே, டக்குனு வந்து குதிச்சுட்டாரே!
(செவ்வாய் அவசரமாக வாசலில் ஓடிப் போய்ப் பார்க்க, தெருக்கோடியில் வீரய்யன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவது தெரிகிறது.
வண்டி அவள் வீட்டு வாசலில் வந்து நிற்க, வீரய்யன் வண்டியை விட்டு இறங்குகிறான். வீரய்யனின் முகம் சோர்வுடன் இருப்பதை செவ்வாய் கவனிக்கிறாள்.)
செவ்: என்னப்பா ஆச்சு? அதுக்குள்ளாற போயிட்டு வந்துட்டீங்களா? சின்னவரு வந்துட்டாரா?
வீர: இல்லம்மா. வண்டி வந்துது. ஆனா, சின்னவரு அதில வல்ல. நம்ம ஐயா கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னேன். அவரு அப்படியே மூஞ்சி சப்பிப் போய் உக்காந்துட்டாரு. தம்பி வல்லேன்னதும், என்ன ஆயிடுச்சோ என்னவோன்னு ஐயாவுக்கு ஒரே கவலை.
செல்லி: அதுக்கு நீ ஏன் அண்ணே மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு வர? இன்னிக்கு வல்லேன்னா, நாளைக்கு வந்துட்டுப் போகப் போறாரு. அவரு என்ன சின்னப் பிள்ளையா என்ன, காணாமப் போயிடறதுக்கு?
வீர: அதில்ல, செல்லி. தம்பி வல்லைன்னதும் நம்ம ஐயா தவிச்ச தவிப்பு இருக்கு பாரு, அதைப் பாத்ததும்தான் எனக்கு மனசு ஆறல.
செவ்: அவரு வந்துடுவாருப்பா! கெளம்பறதில ஏதாவது தாமதம் ஆயிருக்கும். அதுக்கு நீ ஏன் இப்படி இருக்க? சரி, சரி. உள்ள வா. கொஞ்சம் பளைய சோறு இருக்கு. அதைத் தின்னுட்டு வேலைக்குக் கெளம்பு. எனக்கும் ஐயா விட்டில அரிசி பொடைக்கற வேலை பாக்கி இருக்கு. நானும் கெளம்பணும்.
(வீரய்யன் துண்டை உதறிக் கொண்டு உள்ளே வருகிறான்.)
உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 2
மிராசுதார் பொன்னம்பலம் வீடு.
செவ்வாய், ஒரு வயதான பெண்மணியுடன் முற்றதில் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருக்கிறாள்.
வாசலிலிருந்து பொன்னம்பலம் வீட்டுக்குள் வருகிறார்.
செவ்வாய் எழுந்து நிற்க, ‘நீ உக்காரு புள்ள’ என்று சொல்லி விட்டு அவர் உள்ளே போகிறார்.
உள்ளிருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் செவ்வாய்
எழுந்து நிற்க முயல, அவர் அவளைக் கையமர்த்துகிறார்.
பொன்: வூட்டுக்குப் போனதும், ஒங்கப்பனை இங்கே வந்துட்டுப் போகச் சொல்லு.
செவ்: சரிங்கையா!
பொன்: நாளைக்குக் காலையில தம்பி மதுரையிலேந்து வருது. டேசனுக்குப் போய் அவனை
அழைச்சுக்கிட்டு வரணும். அதனால, வண்டி மாடுகளை ரெடி பண்ணி வைக்கச் சொல்லு. காலையில
மூணு மணிக்கே கெளம்பினாத்தான் ரயில் வரதுக்கு முன்ன டேசனுக்குப் போய்ச் சேர
முடியும். சாயந்திரமா என்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு. சில விஷயங்கள்
சொல்லணும்.
செவ்: சின்னையாவுக்குப் படிப்பு முடிஞ்சு போச்சுங்களா?
பொன்: இல்ல. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இப்ப லீவுக்கு வரான்.
(மறுபடி உள்ளே போகிறார்.
போகும்போது கூடத்தில் மாட்டியிருக்கும் தம்பியின்
புகைப்படத்தைப் பார்க்க, செவ்வாயும் அந்தப் பக்கம் ஒரு கணம் பார்த்து விட்டுத் தன்
வேலையைத் தொடர்கிறாள்.)
உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 1
கிராமத்துக் கீற்றுக் கொட்டகையில் அன்னக்கிளி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
திரைப்படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் செவ்வாய், தன் தோழி ருக்குவுடன்
வருகிறாள்.
ருக்கு: என்னாடி படம் இது? ஏதோ வேலை செஞ்சுட்டு ஓச்சலா வந்து உக்காந்தா, தமாசாப் பொளுது போகுமேன்னு பாத்தா, வெறும் அளுவைப் படம். இந்த அளுவதான் நமக்கு
வீட்ல எப்பவுமே இருக்கே! அதைக் காசு குடுத்துக் கொட்டாயில வந்து பாக்கணுமாக்கம்!
ஏதோ ஆட்டம், பாட்டம், காதல் ஜோடி, கலர் கலரா சீனு, சுருளி மனோரமா தமாசு இதெல்லாம்
இருக்குமாங்காட்டியும்னு வந்தா... சே! ஒரே அளுவைப் பொணம்டி! படம் பாத்துட்டு
வெளியில வரப்ப, ஒரு சந்தோசம் இருக்கா, பாரேன்.
செவ்வாய்: ஆட்டம் பாட்டம்தான் எல்லாப் படத்திலேயும் இருக்கே ஏதோ ஒண்ணு ரெண்டு
படம் இப்படி சோகமா இருந்தா என்ன குறைஞ்சு போயிடும்? இந்தப் படம் பட்டணக் கரைங்கள்ள
மாசக்கணக்கா ஓடிச்சுன்னு பேசிக்கறாங்களே!
ருக்கு: ஆங்! பட்டணக்காரங்க பேச்சைக் கேளு. அவங்களுக்கென்ன?எத்தையாவது சொல்லி நம்மைப் படம் பாக்க வச்சுக் காசு பண்ணிட்டா சரிதான். ஏன், பாகவதர் படம் கூடத்தான்
அந்தக் காலத்தில ஒரு வருஷம் ஓடிச்சுன்னு சொல்லுவாங்க. அதுக்காக, நீயும் நான்
உக்காந்து அந்தப் படங்களைப் பாக்க முடியுமாக்கும்?
செவ்: இப்ப இந்தப் படத்துக்கு என்ன குறைச்சல்ங்கற நீ?
ருக்கு: அடி போடி! எனக்கு மனசு ஒரே விரக்தியாப் போச்சு. நம்ம அளுவை போதாதுன்னு
மத்தவங்க அளுவை வேற. பாவம், அந்தப் பொண்ணு. அதைப் போட்டு அப்படி மிதிச்சுட்டுப்
போறாங்களே, சொரணை கெட்ட எருமை மாடுங்க...ஆமாம், உனக்கு இந்தப் படம் புடிச்சிருக்கா?
செவ்: படம் புடிச்சிருக்கோ என்னவோ, அந்த வாத்தியார் புள்ளையைப்
புடிச்சிருக்கு. நம்ம ஊருக்கும்தான் பட்டணக் கரையிலேந்து எவ்வளவோ பேர் வராங்க.
நம்மளை மதிச்சு மொகம் கொடுத்து யாராவது பேசறாங்களா? ஏதோ நாமெல்லாம், கீழ்ப்பட்ட
சனங்க, படிக்காதவங்க, அன்னாடம் கூலி வேலை செஞ்சு பொழைச்சுக்கிட்டு, கஞ்சியைக்
குடிச்சுட்டு, வேலை செஞ்ச அலுப்பிலேயே அசந்து தூங்கிட்டுக் காலத்தை ஓட்டறவங்க..
இதுக்குமேல நம்மைப் பத்தி யாராவது நெனைச்சு கவலைப்படறாங்களா? இந்தப் படத்திலயாவது
அந்த வாத்தியாரு அன்னத்தை அவ்வளவு தூரம் லட்சியம் பண்ணிப் பேசிக் காதலிச்சு, அவளை
உசிரா நெனைக்கறாரே, அதைச் சொல்லு. கண்ணாளம் கட்டிக்காட்டா என்ன, இவ்வளவு தூரம் அவ
மேல ஆசை வெச்சதே பெரிசில்லையா?
(ருக்கு பகீரென்று பெரிதாகச் சிரிக்கிறாள். இப்படிப் பெரிதாக அடிக்கடி சிரிப்பது அவள் இயல்பாக இருக்கிறது.)
ருக்கு: அடியே, செவ்வா! சரியா ஆளுடி நீ! அந்த அன்னத்துக்கு ஒரு வாத்தி கிடைச்ச
மாதிரி, ஒனக்கும் ஒரு பட்டணத்துக்காரன் கெடைப்பானான்னு ஏங்கற போலருக்கு!
செவ்: போடி. அப்படி ஒண்ணும் இல்ல. படத்தோட கதையைப் பத்திச் சொன்னேன். நமக்கு
ஏண்டி இது மாதிரி ஆசையெல்லாம்? நம்ம சோலியைப் பாத்துக்கிட்டு நாம தேமேன்னு
இருக்கறப்பவே, நம்ம ஊர்ல நாலு தடிப்பசங்க நம்மை சீண்டிப் பாக்கறாங்க. இந்த
இருப்பில, இப்படியெல்லாம் வேற ஆசைப்படணுமா? சரி. ஒன் வீடு வந்துடுச்சு. எங்கே,
என்னோட வந்துக்கிட்டே இருக்க? தூக்க மயக்கமா? இல்ல, மனசில ஏதாவது கோட்டை
கட்டிக்கிட்டு வரியா? போடி வீட்டுக்கு.
(ருக்கு பிரிகிறாள். செவ்வாய் சற்று தூரம் நடந்து தன் குடிசைக்குள் நுழைகிறாள். வீட்டில் தூக்கம் கலையாமலேயே, அவள் தந்தை வீரப்பனின் குரல் கேட்கிறது. ‘என்ன புள்ள, படம் விட்டுட்டாங்களா?’
செவ்வாய் ‘ஊம்’ என்று முனகி
விட்டுப் படுத்துக் கொள்கிறாள்.
தூக்கம் வராமல் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கிறாள். ‘அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரி பின்னணியில் ஒலிக்கிறது.
கனவு போல் ஒரு தோற்றம்.
அவள் மணமகளாக அலங்கரிக்கப்பட்டு நின்று, சுற்றுமுற்றும் பார்க்கிறாள். உருவம்
இல்லாமல், பேண்ட், சட்டை, ஷூ, சிகரெட், தோளில் ஒரு பை இவை மட்டும் தெரிய, சட்டைக்
கைகள் நீண்டு இவள் கழுத்தில் மாலையிட்டு இவளை அணைத்துக் கொள்கின்றன.
உறவுகள் தொடர்கதை திரைக்கதை காட்சி 7 பொழுது சாய்ந்து விட்ட நேரம். மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம். முன்பு சிலர் சீட்டாடிய அதே...