Saturday, April 11, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 8

 உறவுகள் தொடர்கதை

திரைக்கதை 

காட்சி 8


(பொன்னம்பலத்தின் வீடு. செவ்வாய் புழக்கடையில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறாள். பல் துலக்கியபடி, துரை உள்ளிருந்து வருகிறான்.)

செவ் (திரும்பி): என்னங்க சின்னையா? இப்பத்தான் எளுந்திருக்கிறீங்களா?

துரை: ஆமாம்.

செவ்: மதுரையிலேயும் இந்த நேரத்துக்ககுத்தான் எளுந்திருப்பீங்களா?

துரை: சேச்சே! இந்நேரம்தான் தூங்கவே ஆரம்பிப்போம். 

செவ்: அப்ப, ராத்திரியெல்லாம் கண் முளிச்சுப் படிப்பீங்களா?

துரை: ஆமாம். பரீட்சை சமயமா இருந்தா, படிப்பு. மத்த சமயமா இருந்தா, சினிமா, சீட்டாட்டம். 

செவ்: அப்ப, காலேஜுக்கு எப்பப் போவீங்க?

துரை: தூக்கம் வல்லேன்னா போவோம். சீக்கிரம் முழிப்பு வந்தாலும் போவோம். பொழுது போகலேன்னா போவோம், போரடிச்சுதுன்னாலும் போவோம்!

செவ்: நல்லா இருக்கு, நீங்க படிக்கற லட்சணம்!

துரை: ஆமாம். இதென்ன, நீ இந்த வேலையெல்லாம் செய்யற?

செவ்: எங்கப்பாருக்கு ஒடம்பு சரியில்ல. ஜொரம் அடிக்குது. அதனாலதான் நான் வந்தேன். 

துரை (குறும்பாக): ஓ! ஒங்கப்பாருக்கு பதிலா வண்டி கூட ஓட்டுவியோ?

செவ்: ஏன், ஓட்டத் தெரியாதுன்னு நெனக்கறீங்களா? ஓட்டிக் காட்டட்டுமா?

துரை: அப்படீன்னா, நான் ஊர்லேந்து வந்த அன்னிக்கு ஒங்கப்பாவுக்கு ஒடம்பு சரியில்லாம இருந்திருந்தா, என்னை அழைச்சுக்கிட்டுப் போக, ஸ்டேஷனுக்கு நீதான் வண்டி ஓட்டிக்கிட்டு வந்திருப்பேன்னு சொல்லு. 

செவ்: நீங்கதான் அந்த ரயில்ல வரவே இல்லையே!

துரை: ஆமாம். (முகம் கழுவுகிறான்.) ஆமாம், செவ்வா... ஒனக்கு எப்ப கல்யாணம் கட்டி வக்கப் போறாரு ஒங்கப்பா?

(செவ்வாய் பதில் கூறாமல் தலை குனிந்து கொள்கிறாள்.)

துரை: என்ன பதிலையே காணோம்?

செவ்: இதை நீங்க என அப்பாகிட்ட இல்ல கேட்டிருக்கணும்?

துரை: ஒன் அப்பாவைக் கேக்கறதுக்கு முன்னே, நீ என்ன நெனக்கறேன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான். 

செவ் (திடுக்கிட்டு): சின்னையா! நீங்க என்ன சொல்றீங்க?

துரை: இல்லை, இல்லை. நீ மனசில யாரையாவது நெனச்சுக்கிட்டிருக்கியாங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.  

(செவ்வாயின் கண்கள் அந்த வழக்கமான கனவில் நிலைக்கின்றன. முதலில் முகம் தெரியாத உருவமாக இருந்த தோற்றம், திடீரென்று துரையாக மாறுகிறது. அவள் குழப்பத்துடன் கண்களை மூடித் திறக்கிறாள்.)


துரை: என்ன செவ்வா, கண்ணில தூசி விழுந்துடுச்சா? 
(அவள் அருகே வருகிறான்.)
 
செவ்வாய் (சட்டென்று விலகி): ஒண்ணும் இல்லீங்க.  

துரை: நான் கேட்டது...

செவ்: இதெல்லாம் எனக்கு விளங்கலீங்க. நான் பட்டிக்காட்டில பொறந்து வளந்தவ. அறியாத பொண்ணு. இப்படியெல்லாம் கேட்டா, எனக்கு பதில் சொல்ல வராதுங்க. 

துரை: ஓஹோ! (சிரிக்கிறான்.) சரி, செவ்வா. கேள்வியை நான் கேட்டுட்டேன். பதிலை மெதுவா சொல்லு...யோசிச்சுச் சொல்லு!

(துரை உள்ளே செல்ல, செவ்வாய் குழம்பி நிற்கிறாள்.)

No comments:

Post a Comment

உறவுகள் தொடர்கதை - காட்சி 8

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 8 (பொன்னம்பலத்தின் வீடு. செவ்வாய் புழக்கடையில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறாள். பல் துல...