Sunday, April 12, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 9

 உறவுகள் தொடர்கதை

திரைக்கதை 

காட்சி 9

(செவ்வாயும், ருக்குவும் அம்மன் கோவிலுக்குப் போகிறார்கள். பூசாரி தீபாராதனை காட்டி விட்டு, அவர்களுக்குக் குங்குமம் கொடுக்கிறார். 

பூசாரி: என்ன ருக்கு, இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கே, என்ன விஷயம்?

ருக்கு: இல்லியே! எப்பவும் போலத்தான் இருக்கேன். 

பூசாரி: நீ இல்லேனு சொன்னாலும், சிரிப்பை அடக்க முடியாம நீ தவிக்கறதை, உன் முகம் காட்டுதே!

ருக்கு: போங்க பூசாரி ஐயா, எதையானும் சொல்லிக்கிட்டு!

பூசாரி: என்ன செவ்வா, நீயே சொல்லு, நான் சொல்றது சரியா இல்லையான்னு! (செவ்வாய் அவர் சொன்னதை கவனிக்காமல் வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து) என்ன செவ்வா? நீ ஏதோ குழப்பமா இருக்க போல இருக்கே!

செவ்: ஆங்... என்ன சொன்னீங்க?

பூசாரி: என்னம்மா ஒடம்புக்கு?

செவ்: ஒண்ணும் இல்லீங்களே!

பூசாரி: சரியான ஜோடிதான் நீங்க ரெண்டு பேரும்! ஒருத்தி என்னடான்னா, எதையோ நெனச்சு நெனச்சு சிரிச்சுக்கிட்டிருக்கா. இன்னொருத்தி எதையோ நெனச்சுக் குழம்பிக்கிட்டிருக்கா. கேட்டா, ரெண்டு பேருமே ஒண்ணும் இல்லேங்கறீங்க. வரப்ப, ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா, இல்லியா?

ருக்கு: ஓ, நிறையப் பேசிக்கிட்டோமே!

பூசாரி: பொய்யைப் பாரு. ரெண்டு பேருக்குமே வெவ்வேற நினைவு. அதனால, ரெண்டு பேரும் எதுவும் பேசிக்கல. ஒருத்தி எதுவும் பேசாதது இன்னொருத்திக்கு வித்தியாசமாத் தெரியவும் இல்ல. சரி, சரி. போயிட்டு வாங்க. (செவ்வாயைப் பார்த்து) இங்கே பாரு, செவ்வா, நீ எதையோ நெனச்சுக் குழப்பிக்கிட்டு இருக்கேன்னு நெனக்கறேன். ஒங்கப்பாவுக்குத்தான் ஒடம்பு சரியாயிடுச்சே. வேற ஏதாவது பிரச்னையா? எதுவா இருந்தாலும், மனசைக் குழப்பிக்கறதில அர்த்தம் இல்ல. தெளிவா இரு. மனசை தைரியப்படுத்திக்க. ஆத்தா நம்மைக் கைவிட மாட்டாங்கற நம்பிக்கையோட இரு.  (ருக்குவிடம் திரும்பி) இங்க பாரு, ருக்கு. சும்மா அர்த்தமில்லாம சிரிச்சுக்கிட்டே இருக்காம, செவ்வாகிட்டப் பேசி அவ பிரச்னை என்னனு கேட்டு அவளைக் கொஞ்சம் சமாதானப்படுத்து!

(செவ்வாய், ருக்கு இருவரும் போகிறார்கள். பூசாரி மீண்டும் செவ்வாயை அழைக்கிறார்.)

பூசாரி: இங்க பாரு! நாகாத்தாளுக்கு ஊத்தப் பால் எடுத்துக்கிட்டு வந்துட்டு, ஊத்தாம மறந்து போய், பால் பாத்திரத்தை இங்கேயே வச்சுட்டுப் போறியே!

செவ்: ஆமாங்க. ஏதோ ஒரு ஞாபகத்தில  மறந்துட்டேன்.

பூசாரி: ஞாபகத்தில மறப்பியா? வேடிக்கையா இருக்கு. அது சரி. கூட ஒத்தியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கியே, ஒண்ணுக்கும் உபயோகம் இல்லாம, அவளாவது சொல்ல மாட்டா!

செவ்: இங்க பாருங்க, பூசாரி ஐயா! நானும் அப்பேலேந்து பாத்துக்கிட்டிருக்கேன். என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும். 

பூசாரி: அடேயப்பா! பொல்லாத கோபம்! ஒன் கோவத்தை அடக்கத்தான் இந்த ஊரிலேயே பெரிய கோவக்காரன் ஒத்தன் இருக்கானே!

(பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றிக் கொண்டிருக்கும் செவ்வாய் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.)

செவ்: அது யாருங்க, பூசாரி ஐயா?

பூசாரி: அட இவ்வளவு வெவரம் தெரியாதவளா இருக்கியே! இந்த ஊருக்கே தெரியுமே, இவளுக்குப் புருசனா வரப் போறது யாருன்னு.

செவ்: இங்க பாருங்க, பூசாரி ஐயா. அப்புறம் எனக்கு நெசமாலுமே கோவம் வந்துரும்!

பூசாரி: ஒன் கோவத்தையெல்லாம் அந்த மாடசாமிகிட்ட காட்டிப் பாரு. 

( செவ்வாய் வியப்புடன் ருக்குவைப் பார்க்க, ருக்கு வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.)

செவ்: ஓகோ! அப்படியா விஷயம்? என்னடி ருக்கு, எங்கிட்ட கூட சொல்லலியே நீ!

ருக்கு: போடி! அவர்தான் ஏதாவது சொல்றாருன்னா, நீயுமா?

பூசாரி: நான் சொன்னதை இல்லேன்னு சொல்லு, பாக்கலாம். 

ருக்கு: செவ்வா! வாடி, போகலாம். நேரமாயிடுச்சு!

(இருவரும் போகிறார்கள்.)

செவ்: டீ ருக்கு! எத்தனை நாளாடி இது? 

ருக்கு: போடி! நீயுமா இப்படி?

செவ்: பின்னே, பூசாரி சொன்னதெல்லாம் பொய்யா?

ருக்கு: யாருக்குத் தெரியும்?

செவ்: ஒனக்குத்தானே தெரியும், ஒன் மனசில என்ன இருக்குன்னு!

ருக்கு (சற்று ஏமாற்றத்துடன்): எம் மனசில இருக்கறது, பூசாரி சொல்றது இதெல்லாம் இருக்கட்டும் . சம்பந்தப்பட்ட ஆளு மனசில என்ன இருக்கோ!

செவ்: அப்படி ஒத்துக்கடி, கள்ளி! நீ கவலைப்படாதே! மாடசாமி அண்ணன்கிட்ட நான் பேசறேன்.

ருக்கு: அது ஒரு முசுடு. அது யார் சொன்னாலும் கேக்காது.  புடிச்சா ஒரே புடிதான். அந்த ஆளுக்கு என்னைப் புடிக்கல. அன்னிக்கே என் பல்லை உள்ளே தள்ளிடுவேன்னு சொல்லல?

செவ்: பொண்டாட்டியா வரப் போறவளை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திப்பாக்கணுங்கறதுக்காக அப்படிச் சொல்லி இருப்பாரு. 

ருக்கு: நீயும் சேந்து என்னைக் கேலி பண்ணு.  கடைசியில, அது இவளை யாரு கட்டிப்பான்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுச்சுன்னா, அப்புறம் என்னால ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க முடியாது.

செவ்: ஒன்னை வேணாம்னு சொல்றதுக்கு, அதுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கணும்!

ருக்கு: பாத்தியா, மறந்துட்டேன். பூசாரி சொன்னப்பறம்தான் நானே கவனிச்சேன். நீ ஏன் ஒரு மாதிரி இருந்த?

செவ்: அப்படி எதுவும் இல்ல. 

ருக்கு: பாத்தியா? எங்கிட்ட விஷயத்தைக் கறந்துக்கறியே தவிர, ஒன் விஷயத்தைச் சொல்ல மாட்டேங்கற பாரு!

செவ்: ஏதாவது இருந்தாதானேடி சொல்றதுக்கு?

ருக்கு: பின்ன ஏன் ஒரு மாதிரி இருந்தியாம்?

செவ்: ஒண்ணுமில்ல. 

ருக்கு: ஒன்னை வெட்டிப் போடணுண்டி!

No comments:

Post a Comment

உறவுகள் தொடர்கதை - காட்சி 16

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 16 (இரவு நேரம். செவ்வாயின் வீடு. அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வீரய்யனைப் பார்த்தபடியே செவ்வாய் வெளி...